
இந்த வருடத்தில் இரு தேர்தல்கள்; ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன்
இந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய செய்தி சனலான வியோன் (WION ) இன் பேர்த்தில் உள்ள நிருபர் சிதாந்த் சிபலுக்கு அவுஸ்திரேலியாவில் வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்துள்ளமை குறித்து கரிசனை தெரிவித்த ஜனாதிபதி விக்கிரமசிங்க, இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் எதையும் இலங்கை அனுமதிக்காது என்று குறிப்பிட்டார்.
நாங்கள் இந்திய பாதுகாப்பை மனதில் வைத்துள்ளோம், இந்திய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் எதையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம், இவை அனைத்தும் ஹைட்ரோகிராஃபிக் கப்பல்கள் எனவும் ஜனாதிபதி விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
கேள்வி: இந்திய – இலங்கை உறவை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள், இந்த உறவைப் பற்றிய உங்கள் பார்வை என்ன?
ரணில் : உண்மையில் இந்திய-இலங்கை உறவுகள் மேம்பட்டு வருகின்றன, இன்று நாம் நெருங்கிய பொருளாதார உறவுகளையும் இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். அதுதான் வழி என்று நினைக்கிறேன்.
பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா எமக்கு பாரிய உதவிகளை வழங்கியது. இந்தியா இல்லாமல் நாங்கள் உயிர் பிழைத்திருக்க முடியாது.
அதனால் தான் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவுகளை நாங்கள் பார்க்கிறோம்.
கேள்வி: உங்கள் நாட்டின் தற்போதைய நிலை என்ன, பொருளாதார நிலை, கடந்த ஆண்டில் எப்படி முன்னேற்றம் அடைந்துள்ளது?
ரணில் : நாங்கள் கடன் மறுசீரமைப்பை முன்னெடுத்துச் சென்றுள்ளோம், நாங்கள் அதை நிறைவு செய்துள்ளோம், நாங்கள் உத்தியோகபூர்வ கடனாளிகள் குழுவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். கொள்கையளவில், நாங்கள் என்ன செய்தோம் என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
முறையான பகுதி இப்போது நடைபெறுகிறது மற்றும் அதிகாரப்பூர்வ கடன் வழங்குநர் குழுவுடனான முறையான ஒப்பந்தத்திற்குப் பிறகு, கடன் வழங்கிய நாடுகள் மற்றும் பிற நிதி அமைப்புகளுடன் முறையான ஒப்பந்தங்களுக்கு வர வேண்டும்.
கேள்வி: அது எப்போது முடியும்?
ரணில் : எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் முடிந்துவிடும் என்று நான் நினைக்கிறேன்.
கேள்வி: பிராந்திய பாதுகாப்புக்கு வரும்போது, சீனக் கப்பல்களின் வருகை குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது, இலங்கை அரசாங்கத்தால் சீனக் கப்பல்களின் வருகையை அனுமதிக்கக் கூடாது என்று சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்று நான் நம்புகிறேன்.
ரணில் : இப்போது நாம் இந்தியாவிடம் எப்பொழுதும் கூறுவது என்னவென்றால், நாங்கள் இந்திய பாதுகாப்பை மனதில் வைத்துள்ளோம், இந்திய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் எதையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம், இவை அனைத்தும் ஹைட்ரோகிராஃபிக் கப்பல்கள்.
அதனால் அவற்றை அங்கு வர அனுமதித்தோம். இந்த ஆண்டு, இலங்கைக்கான திறனைக் கட்டியெழுப்புவது என்று நாங்கள் முடிவு செய்தோம்.
எனவே இப்போது மற்றவர்களுடன் ஒத்துழைப்பதன் மூலம் இலங்கையின் சொந்த நீரியல் திறனைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துகிறோம்.
கேள்வி: இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே எப்படியாவது ஒரு பிளவை உருவாக்க சீனா முயற்சிக்கிறது என்று நினைக்கிறீர்களா?
ரணில் : இலங்கைக்கு சீனக் கப்பல்கள் காலங்காலமாக வந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்த சீனா ஒருபோதும் முயற்சிக்கவில்லை, இந்தியாவுடன் நாம் இணக்கமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் எப்போதும் கூறுகின்றனர்.
எங்களைப் பொறுத்த வரையில் எந்தப் பிரச்சினையும் இருந்ததில்லை. வரும் கப்பல்களின் எண்ணிக்கை கூடவில்லை, குறையவில்லை. ஆனால், இதற்கு முன் வராத மற்ற நாடுகளின் கப்பல்களையும் வரவழைத்து வருகிறோம்.
ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான் நாடு கப்பல்கள் இலங்கைக்கு வந்துகொண்டிருக்கின்றன. ஏனைய பல ஐரோப்பிய நாடுகளை இலங்கைக்கு வருமாறு கேட்டுள்ளோம் என்றார்.
மேலும் இந்த செவ்வியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி, இலங்கையில் இந்திய ரூபாவின் பயன்பாடு இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. அவற்றை இலங்கையில் பயன்படுத்துவதற்கு எந்த சிக்கலும் இல்லை, இந்த பயன்பாடானது சுற்றுலத் துறைக்கு உதவும் என்றார்.
அத்துடன், இந்திய சுற்றுலா பயணிகளின் வருகையானது இலங்கையின் பொருளாதாரத்துக்கு பெரிதும் உதவியுள்ளது.
இந்தியா எங்களுக்கு நிதி உதவி செய்துள்ளது, ஆனால் இலங்கையில் இந்திய முதலீடுகளை எதிர்பார்க்கின்றோம். மேலும் புதிய கட்டமாக சென்னை ஐஐடி இலங்கையில் ஒரு வளாகத்தை கண்டியில் நிறுவ முடிவெடுத்துள்ளது.
இதற்காக அமைச்சர்கள் குழுவொன்று இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளது, தற்போது நாம் இடங்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஆனால் தற்போதுள்ள சில கட்டிடங்களை எடுத்து அடுத்த ஆண்டு இந்த திட்டத்தை தொடங்க விரும்புகிறோம்.
தமிழக மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையானது பெரும் பிரச்சினையாக உள்ளது. இந்த ஆண்டின் நிறைவுக்குள் குறித்த பிரச்சினைக்கு தீர்வுகாண முயல்கிறோம் என்றும் அவர் கூறினார்.