
மைத்திரிக்கும் இந்தியா அழைப்பு
ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயம் நிறைவடைந்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியாவின் அழைப்பின் பேரில் எதிர்வரும் 16 ஆம் திகதி முன்னாள் மைத்திரிபால சிறிசேனவும் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். முன்னதாக, ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தது.
இந்தியாவுக்கு விஜயம் செய்வதற்கு உத்தியோகபூர்வ திகதியை வழங்குமாறு இந்திய உயர்ஸ்தானிகராலயம், மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில், பெப்ரவரி 16 ஆம் திகதியை மைத்திரிபால வழங்கியிருந்தார்.
மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 13, 14, 15 ஆம் திகதிகளில் வாசிங்டனில் தங்கியிருந்து பின்னர் 16 ஆம் திகதி இந்தியா திரும்பி புதுடெல்லியில் இந்திய அதிகாரிகளை சந்திக்கவுள்ளார். அந்த அட்டவணையின்படி பெப்ரவரி தொடக்கத்தில் ஜே.வி.பிக்கு ஒரு திகதியை வழங்க இந்தியா ஏற்பாடு செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் அண்மைய நாட்களில் இந்தியாவிற்கு விஜயம் செய்த போது பல அரசியல்வாதிகளை சந்தித்து கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்.
இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் அடுத்த சில நாட்களுக்குள் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருவதாக வெளியான செய்தியை கட்சியின் முன்னாள் எம்.பி.சுஜீவ சேனசிங்க மறுத்துள்ளார். .
இதற்கிடையில் இந்தியா சென்றுள்ள பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உத்தரப் பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்தை சந்தித்துள்ளார்.
நாமல் ராஜபக்ஷ அயோத்தி ராமர் கோவில் பூஜை வழிபாடுகளில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் தனிப்பட்ட பயணமாக இந்தியாவிற்கு சென்றதும் தெரிந்ததே.