
தனது நலனுக்காக தமிழர்களை இந்தியா ஏமாற்றி வருகின்றது; ஜே.வி.பி.போன்றவர்களுடன் கைகோர்க்கின்றது -தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூறுகிறது
ஜே.வி.பி.யை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த காலங்களிலே தமிழ் மக்களுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருந்த அனுரகுமார திசாநாயக்க போன்றவர்களை இந்திய அரசாங்கம் அழைத்திருக்கிறது இந்த அழைப்பை பொதுவாகப் பார்க்கையில் எமது வடக்கு கிழக்கு மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் தமிழ் மக்களை பகடைக்காயாக பயன்படுத்தி இந்திய அரசுகள் இவ்வளவு காலமும் தங்களுடைய நலன்களுக்காக செயல்பட்டு இருக்கின்றன. அதைவிட இந்திய -இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக 1987 ல் ஜே.வி.பி.முழு நாட்டையுமே பற்ற வைத்தது.பல்லாயிரம் சிங்கள மக்கள் கொல்லப்பட்டும் பல்லாயிரம் சிங்கள மக்கள் காணாமலும் ஆக்கப்பட்டனர்.இதையெல்லாம் இந்தியா மறந்திருக்காது.
அதை விட இந்திய -இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட வடக்கு கிழக்கு இணைப்பை ,ஜே.வி.பியுடன் இருந்த அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான குழுவினர் வழக்கினை தாக்கல் செய்து வடகிழக்கு இணைப்பை நீதிமன்றத்தின் ஊடாகப் பிரித்தார்கள்.இலங்கைத் தமிழர்கள் சார்பில் தாங்களே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டு,இரு நாட்டுத் தலைவர்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை இவர்கள் நீதிமன்றத்தின் ஊடாகப் பிரித்தபோது இந்தியா எதுவுமே பேசாதிருந்தது.
இவ்வாறு இந்திய அரசாங்கத்துக்கு எதிரான ஒரு செயற்பாட்டை செய்திருந்தும் கூட இன்று ஜே.வி.பியில் இருந்து தேசிய மக்கள் சக்தியுடைய தலைவராக இருக்கின்ற அனுகுமார திசாநாயக்கவை அழைத்து பேசியிருப்பது என்பது தமிழ் மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளிக்கின்றது.
1970 ஆம் ஆண்டு காலப் பகுதியிலே வடக்கு கிழக்கில் இருந்து பல தமிழ் பிரதிநிதிகளையும் இளைஞர்களையு அழைத்து அங்கே பல இயக்கங்களை உருவாக்கி அவர்களுக்கு ஆயுதம் வழங்கி அவர்களை உருவாக்கிய இந்திய அரசு தமிழ் மக்கள் மத்தியிலே தமிழ் மக்களின் உரிமை சார்ந்த விடயங்களிலே விடுதலைப் புலிகள் உறுதியாக இருந்து பெரும் வளர்ச்சியும் மக்கள் ஆதரவும் பெற்ற ,தமிழீழ விடுதலை புலிகளை, இலங்கை ஆட்சியாளர்களுக்கு உதவுவதற்காக அழிக்க பெரும் உதவிகளை வழங்கியதுடன் அதன் மூலம் தமிழ் மக்களுடைய உரிமை போராட்டத்தை அழித்து இன்று 14 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் கூட தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வினை பெற்றுக் கொடுக்காது மாறாக அனுரகுமார திசாநாயக்கனையையும் அவரோடு சேர்ந்த குழுக்களையும் அழைத்து சந்தித்திருப்பது உண்மையிலேயே எங்களது மக்களுக்கு கவலை அளிக்கிறது.
இந்த விடயத்தில் இந்தியா தன்னுடைய பிராந்திய நலன்களை மாத்திரம் கருத்தில் கொண்டு இந்தச் சந்திப்புகளை மேற்கொண்டிருக்கின்றது. தமிழ் மக்கள் மீது ஒரு துளி அளவும் கூட அக்கறை இல்லாது இந்தச் சந்திப்பு நடைபெற்று இருக்கின்றது.
எங்களைப் பொறுத்தமட்டில் இலங்கைத் தீவில் நிம்மதியாக வாழ வேண்டுமாக இருந்தால் உரிமை சார்ந்த எமது பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். தமிழர்களுடைய தாயகம் தேசியம் சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்படுகின்ற போது தான் இந்த தீவிலே தமிழர்கள் பாதுகாப்பாக வாழ முடியும்.
உண்மையில் இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டை மாற்ற வேண்டும். இலங்கையில் தமிழ் மக்களை பகடைக்காயாக பயன்படுத்தி இந்திய அரசுகள் இவ்வளவு காலமும் தங்களுடைய நலன்களுக்காக செயல்பட்டு இருக்கின்றன.
எனினும் வடக்கு கிழக்கில் இருக்கின்ற தமிழர்கள் தான் தங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பார்கள் என்பதை முற்றாக மறந்து அவர்களுடன் சேர்ந்து செயற்படுகின்றது. ஆனாலும் இந்தியாவை எமது மக்கள் நேசிக்கின்றார்கள். இந்தியாவை நம்பி வாழ்கின்றார்கள்.கைவிடமாட்டார்கள் என்றும் நினைக்கின்றனர்.
தாங்கள் ஆயுதங்களை கொடுத்து அவர்களுக்கான உதவிகளை செய்து அவர்களை வளர்த்து இந்த அரசோடு சேர்ந்து அழித்தது மாத்திரம் இல்லாமல் ஆயுதப் போராட்டம் முடிவடைந்த இந்த நிலையிலும் கூட தமிழீழ விடுதலைப் புலிகளினுடைய தடையை நீக்காமல் தற்போது வரை அந்த தடை நீடிக்கப்பட்டே வருகிறது. அவ்வாறான நிலையில் அந்தத் தடையை நீக்காமல் இவ்வாறாக தங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை அழைத்து பேசியிருப்பது உண்மையிலேயே தங்களுடைய பிராந்திய நலனை மாத்திரம் கருத்தில் கொண்டு இடம்பெற்று இருக்கிறது என்பதை இனியாவது எமது மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.