தமிழ் மக்களை ஒடுக்க பல நாடுகளும் உதவி; தமிழ் தேசிய மக்கள் முன்னணி கவலை

தமிழ் மக்களை ஒடுக்க பல நாடுகளும் உதவி; தமிழ் தேசிய மக்கள் முன்னணி கவலை

தமிழ் மக்களின் குரல்வளையை நசுக்குவதற்கும் ஒடுக்குவதற்கும், ஜனநாயகத்தை பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் இலங்கையினுடைய நண்பர்கள் என கூறிக் கொண்டு பல நாடுகள் இலங்கைக்கு பொருளாதார ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் உதவி செய்துவருகின்றன.இதனை சர்வதேச நாடுகள் உணரவேண்டும் இவை அனைத்தையும் அவர்கள் நிறுத்தவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஊடக பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நேற்று முன் தினம் இலங்கையின் சுதந்திர தினம், தமிழ் மக்களை பொறுத்த மட்டில் கரிநாள் என்பதை வலியுறுத்தி தமிழர் தாயகமான வடகிழக்கு எங்கும் பாரிய மக்கள் போராட்டங்களும் எதிர்ப்பு பேரணிகளும் நடைபெற்றன.

இதனை அடக்குவதற்காக இலங்கையின் அரச இயந்திரமான பொலிசாரும், இராணுவத்தினரும், விசேட அதிரடிப்படையினரும் சகல பலப் பிரயோகத்தையும் மேற்கொண்டதை அவதானிக்க முடிந்தது. இது வன்முறையினுடைய உச்சக் கட்டம். ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்குகின்ற செயற்பாடு. தமிழ் மக்களின் கருத்துக்களை குறைந்த பட்சம் வெளிப்படுத்த எந்த வகையிலும் அனுமதிக்க மாட்டோம் என்பதை இலங்கை அரசும் அரச இயந்தரமான பொலிசாரும் இராணுவத்தினரும் மீண்டும் ஒருதடவை சொல்லி இருக்கின்றனர்.

தமிழர் தாயகத்தை பொறுத்தளவில் யாழ்ப்பாணம், கிளிநோச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை போன்ற பிரதேசங்களில் கரிநாளாக சுதந்திர தினத்தை அனுஸ்டிக்க தமிழ் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

அம்பாறையில் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் நானும் எனது தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியும் பங்கேற்றோம். அப்போது அம்பாறை மாவட்ட மக்கள் வருகை தந்திருந்த 3 பேரூந்துகளை பொலிசார் நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளனர்.

பேரூந்துகளின் உரிமையாளர்கள் அச்சுறுத்தப்பட்டதுடன் ஆர்பாட்டம் முடிந்த பின்னர் ஒரு பேரூந்து பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அதன் உரிமையாளர் அச்சுறுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மிக பயங்கரமாகவும் படுமோசமாகவும் தாக்கப்பட்டுள்ளதுடன் 6 பேர் கைது செய்யப்பட்டனர். பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தாக்கப்பட்டமையை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இவ்வாறு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் தாக்கப்பட்டுள்ளார். அப்பாவிகளான மக்களின் கருத்துக்களை ஜனநாயக முறையில் வெளிபடுத்திய பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்துமே ஜனநாயத்தின் மீதான தாக்குதல் இவற்றை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இந்தத் தாக்குதலின் வாயிலாக சர்வதேசத்திற்கு ஒரு விடயத்தை சொல்லுகின்றோம். ஜனநாயகத்தை பாதுகாக்கின்றோம் என்ற போர்வையிலே இலங்கையினுடைய நண்பர்கள் எனக் கூறிக் கொண்டு பல வெளிநாடுகள் இலங்கைக்கு பொருளாதார ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் உதவிகளைச் செய்து வருகின்றன.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு கைகொடுக்கின்றோம் என்று சில நாடுகள் டொலர்களை வாரிவாரி வழங்கிக் கொண்டிருக்கின்றனர். சர்வதேச நாணய நிதியம் உட்பட இவர்கள் வழங்குகின்ற நிதியை பயன்படுத்தித் தான் இத்தகைய அட்டூழியங்களும் ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகளும் அடக்கு முறைகளும் தமிழர் தாயகம் எங்கும் மிக வீச்சாக கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனவே இலங்கைக்கு நிதி வழங்கும் நாடுகள் இது பற்றி சிந்திக்க வேண்டும். நேற்று முன் தினம் நடாத்தப்பட்டது ஒரு அப்பட்டமான காட்டுமிராண்டித்தனம். ஜனநாயத்தின் மீதும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல். ஆகவே ஜனநாயத்தை பாதுகாப்பதற்காக இலங்கைக்கு நிதிஉதவி அளிக்கின்ற நாடுகள் இலங்கை அரசுக்கு வழங்க போகின்ற செய்தி என்ன?

இவர்கள் இதனை வெறுமனவே பார்த்துக் கொண்டிருக்க போகின்றார்களா? அவர்களின் உதவிகள் இங்கு தமிழ் மக்களின் குரல்வளையை நசுக்குவதற்கும் ஒடுக்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. இதனை சர்வதேச நாடுகள் உணர வேண்டும். இவை அனைத்தும் இலங்கையில் நிறுத்தப்பட வேண்டும். தமிழ் மக்களுக்கு நீதியும் இனப் பிரச்சினைக்கு நிலையான தீர்வும் வழங்கப்பட வேண்டும் என்றால், உடனடியாக ஈழத்தில் நடாத்தப்பட்ட, நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற இன அழிப்பிற்கு எதிராக சர்வதேச விசாரணை நடாத்துவதுதான் தீர்வாக இருக்கும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (2 )