பொதுப்பணிக்கு தாலியை தானமாக வழங்கிய வீரப்பெண்; அம்பாறையில் உணர்ச்சிபூர்வமான சம்பவம்  (படம்)

பொதுப்பணிக்கு தாலியை தானமாக வழங்கிய வீரப்பெண்; அம்பாறையில் உணர்ச்சிபூர்வமான சம்பவம் (படம்)

பொதுப்பணிக்காக நிதிச்சேகரிக்கையில், தனது தாலியை தானமாக வழங்கினார் ஒரு வீரப்பெண்மணி. இவ் உணர்ச்சிபூர்வமான சம்பவம், காரைதீவில் இடம்பெற்றுள்ளது.

காரைதீவின் வடகோடியிலுள்ள காணியொன்று மாற்றினத்தாருக்கு விற்கப்பட்டுவிட்டது.அதனை மீளப்பெறுவதற்காக காரைதீவு அனைத்து ஆலயங்களின் அறங்காவலர் ஒன்றியம் உள்ளிட்ட பொதுப்பணிக்குழுவினர் களத்திலும், புலத்திலுமிருக்கக்கூடிய உணர்வுள்ள காரைதீவு மக்களிடம் நிதி சேகரிப்பீலிடுபட்டார்கள். லட்சக்கணக்கில் மக்கள் உணர்வுபூர்வமாக தாராளமாக நிதியுதவி வழங்கினர்.

காரைதீவு 8ஆம் பிரிவில் நிதி சேகரிப்பில் வீடுவீடு வீடாகச்சென்றபோது ஒரு பெண்மணி தானாக முன்வந்து ‘எப்படியாவது அக்காணியை மீட்டெடுங்கள்’ என உணர்வுபூர்வமாகக்கூறி தனது கழுத்திலிருந்த 10பவுண் தாலியை கழற்றி குழுவினரிடம் கையளித்தார்.

நிதிசேகரிப்புக்குழுவினர் ஒருகணம் அதிர்ந்துபோனார்கள்.

காரைதீவு 8 ஜச் சேர்ந்த திருமதி சாமித்தம்பி சாந்தினி என்பவரே இவ்விதம் தனது தாலியை பொதுப்பணிக்காக வழங்கியவராவார். ஒரு விவசாயியின் மனைவி அவர்.இருந்தும் காரைதீவார் என்ற உணர்வில் அக்காணி கட்டாயம் மீளப்பெறவேண்டும் மண் பாதுகாக்கப்படவேண்டும் என்ற உயரிய நோக்கில் அதனைக்கையளிப்பதாகக்கூறியுள்ளார்.

அறங்காவலர் ஒன்றியத்தலைவரும், கண்ணகை அம்மன் ஆலய தர்மகர்த்தாவுமான இரா.குணசிங்கம் தலைமையிலான நிதிசேகரிப்புக்குழுவினர் அதனை முறைப்படி நன்றி தெரிவித்து அதனைப்பெற்றுக்கொண்டனர்.

தாலியை தானமாக வழங்கிய செய்தி காட்டுத்தீபோல ஊரெங்கும் பரவியது. மக்கள் அதிர்ந்துபோனார்கள். அதனையடுத்து நேரிலும் சமுகவலைத்தளங்களிலும் அப்பெண்மணியின் ஊர்ப்பற்றினை உணர்வை வியந்து வாழ்த்துக்கள் குவியஆரம்பித்துள்ளன.

புலம்பெயர்தேசத்திலுள்ள உணர்வாளர்களும் இப்பெண்மணியை பாராட்டி கவிதைகளையும், கருத்துக்களையும் வெளியிட்டவண்ணமுள்ளனர். குறித்த காணியை மீட்டெடுக்க தியாகத்துடன் பாடுபட்ட மண்மீட்புக்குழுவினருக்கும் பாராட்டுமழை குவிந்தவண்ணமுள்ளது.

ஊருக்கு வேலி போட தாலி வழங்கிய வீரப்பெண்மணியை எதிர்வரும் அம்மனின் குழுத்தி காலத்தில் பாராட்டவேண்டும் என மண்மீட்புக்குழுவினர் கருத்துரைத்துள்ளனர்.

அதுமட்டுமல்ல மண்ணை மீட்டெடுக்கஉதவிய உணர்வாளர்கள் அனைவரையும் பாராட்டவேண்டும் அதேவேளை குறித்த காணியை விற்றவர்களுக்கு ஊரால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

குறித்த காணி மே18 புதனன்று மாலை முறைப்படி உறுதிஎழுதி மீட்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )