மோசடியான அரசாங்கத்தை விரட்டியடிக்கும்;  எதிரணியின் பேரணி விரட்டிக் கலைப்பு;  நீர்த்தாரை ,கண்ணீர் புகைத் தாக்குதல்களால் நிலை குலைந்த போராட்டக்காரர்கள்

மோசடியான அரசாங்கத்தை விரட்டியடிக்கும்; எதிரணியின் பேரணி விரட்டிக் கலைப்பு; நீர்த்தாரை ,கண்ணீர் புகைத் தாக்குதல்களால் நிலை குலைந்த போராட்டக்காரர்கள்

மூன்று நீதிமன்றங்களின் தடையுத்தரவுக்கு மத்தியிலும் அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகைத் தாக்குதல்களை நடத்தி பேரணியில் கலந்துகொண்டவர்களை விரட்டியடித்தனர்.இதனால் இந்தப் பேரணி தொடங்கிய இடத்திலேயே முடியும் நிலை ஏற்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ‘’மாற்றத்தை செய்யும் வருடம் 2024 – மோசடியான அரசாங்கத்தை விரட்டியடிப்போம்’’ என்ற தொனிப்பொருளில் இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

பேரணியை விகாரமகாதேவி பூங்கா மற்றும் மாளிகாவத்தை ஆகிய பிரதேசங்களில் இருந்து கோட்டை நோக்கி நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்தப் பேரணி ஆரம்பிக்கப்பட முன்னர் பேரணிக்கு தடைகோரி பொலிஸார் நீதிமன்றங்களை நாடியிருந்தனர். இதன்படி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், கொழும்பு நீதவான் நீதிமன்றம் மற்றும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் என்பனவற்றால், இந்தப் பேரணி சில வீதிகள் ஊடாக பயணிப்பதற்கும், அரச கட்டடங்கள் அமைந்துள்ள பிரதேசங்களுக்குள் நுழைவதற்கும் மற்றும் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறான வகையில் நடத்தப்படுவதற்கும் தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடைய 16 முக்கியஸ்தர்களுக்கு எதிராகவும், பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்ட 500க்கும் மேற்பட்டோருக்கு எதிராகவும் இந்தத் தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.

இதன்படி மாளிகாவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முஸ்லிம் பொது மையவாடி தொடக்கம் பிரதீபா மாவத்தை, சத்தர்ம மாவத்தை, ஜயந்த வீரசேகர மாவத்தை, மில்டன் பெரேரா மாவத்தை, ஜும்மா சந்தி ஊடாக சங்கராஜ மாவத்தை வரையான பகுதிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட தடை விதித்து கொழும்பு இலக்கம் 04 நீதவானால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தால் டீன்ஸ் வீதி, டி.பி. ஜயா மாவத்தை, தொழில்நுட்ப சந்தி உள்ளிட்ட பல பகுதிகளுக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், போராட்டக்காரர்களின் கருத்துரிமைக்கு இடையூறு விளைவிக்காமல் கருத்து தெரிவிக்கும் வகையில் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பி.டி.சிறீசேனா மைதானம் மற்றும் ஹைட் பார்க் மைதானம் பாதுகாப்பாக ஒதுக்கப்படும். அந்த மைதானங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை எனவும், அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது.

அதேபோன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் வீதி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாமெனவும் நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம், மத்திய வங்கி மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகிய கட்டிடங்கள் அமைந்துள்ள பிரதேசங்களுக்குள் நுழைய கூடாது என்றும் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை இந்த ஆர்ப்பாட்டப் பேரணிக்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி கறுவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றத்தை நாடிய நிலையில் கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் அந்த கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

மக்கள் கருத்து சுதந்திரம் அரசியலமைப்பின் ஊடாக உறுதி செய்யப்பட்டடுள்ளதால் இதற்கு தடையுத்தரவு பிறப்பிக்க முடியாது என்று நீதவான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமது பேரணி பயண பாதையை மாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியினர். விகாமகாதேவி பூங்கவுக்கு அருகில் கூடினர். பிற்பகல் 3 மணியளவில் பேரணி ஆரம்பமானதுடன், அதில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, ராஜித சேனாரட்ன உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதேவேளை நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் இருந்து பெருந்திரளான மக்களும் பேரணியில் கலந்துகொண்டிருந்தனர்.

கொழும்பு விகாரமகாதேவி பூங்கா அருகில் இருந்து தர்மபால மாவத்தை ஊடாக கொள்ளுப்பிட்டி பக்கமாக பேரணி செல்ல முற்பட்டபோது விகாரமாதேவி பூங்கவுக்கு அருகில் குவிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பொலிஸாரும், கலகம் அடக்கும் பிரிவினரும் பேரணியை முன்னால் செல்லவிடாது தடுத்து நிறுத்தினர். இவ்வேளையில் பேரணியில் கலந்துகொண்டவர்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முன்னால் செல்ல முயன்ற போது, நீர்த்தாரை தாக்குதல் மற்றும் கண்ணீர்புகை தாக்குதல்களை மிகக் கடுமையாக மேற்கொண்டு அவர்களை விரட்டியடித்தனர்.

இதன்போது அங்கிருந்த சஜித் பிரேமதாசவும் கண்ணீர் புகைக்குள் சிக்கிக்கொண்ட நிலையில் அவரின் பாதுகாப்பு பிரிவினர் அவரை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர்.

இதேவேளை அங்கிருந்தவர்கள் மீது மீண்டும், மீண்டும் பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்களை நடத்தி அவர்களை முன்னேறவிடாது தடுத்து நிறுத்தினர். இதன்போது பேரணியில் கலந்துகொண்ட சிலர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து அந்தப் பகுதியில் பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு மத்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பில் பல வீதிகளில் நேற்று பிற்பகல் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )