நாங்கள் உங்களைத் திருப்பி அடிப்போம்; சஜித் எச்சரிக்கை

நாங்கள் உங்களைத் திருப்பி அடிப்போம்; சஜித் எச்சரிக்கை

அலரிமாளிகை, ஜனாதிபதி செயலகம், நிதி அமைச்சு உள்ளிட்ட கட்டிடங்கள் உலகின் முன்னிலையான தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களாக மாற்றியமைக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் ‘’மாற்றத்தை செய்யும் வருடம் 2024 – மோசடியான அரசாங்கத்தை விரட்டியடிப்போம்” என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்களே 2022ஆம் ஆண்டில் நாட்டை சீர்குலைத்த கோத்தாபய ராஜபக்‌ஷவை வெளியேற்றும் புரட்சியை ஆரம்பித்து வைத்தோம். நாட்டை தற்போது ஆட்சி செய்யும் ரணில் – ராஜபக்‌ஷ அரசாங்கத்திற்கு நீண்ட காலம் இருக்க முடியாது. இந்த அரசாங்கம் நாட்டு மக்கள் மீது ஏற்படுத்தக் கூடிய கஸ்டங்களை கொடுத்து நாட்டின் 20 இலட்சம் மக்களையும் பசி, பட்டினி மற்றும் வறுமைக்குள் கொண்டு சென்றது. இதனால் ரணில் – ராஜபக்‌ஷ அரசாங்கத்திற்கு நாங்கள் பயப்படப்போவதில்லை. இது ஆரம்பம் மட்டுமே. ராஜபக்‌ஷக்களின் கைபொம்மை ஜனாதிபதியிடம் நாங்கள் கோருவது தேர்தலையே ஆகும்.

நாங்கள் மக்கள் ஆசீர்வாதத்தின் மூலமே ஆட்சிக்கு வருவோம். நாட்டை சீரழித்த ராஜபக்‌ஷக்களுடன் டீல் போட்டு ஆட்சிக்கு வரப் போவதில்லை. மக்களின் அனுமதியுடனேயே வருவோம். இப்போது ரணில் – ராஜபக்‌ஷ அரசாங்கம் மக்களுக்கு பயந்துள்ளது. மக்கள் சக்திக்கு பயந்த அரசாங்கமே இது. நீதிமன்றத்திற்கு சென்று தடையுத்தரவுகளை பெற்றுள்ளனர். நாங்கள் சட்டத்தை மீறி நடக்கவில்லை. ஆனால் அரசாங்கம் மக்களின் அடிப்படை உரிமைகளை முழுமையாக மீறியுள்ளது. முடிந்தால் ரணிலுக்கும் ராஜபக்‌ஷக்களுக்கும் மக்கள் மத்தியில் வந்துகாட்டுமாறு கேட்கின்றேன்.

எங்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல்களை நடத்தியுள்ளனர். ஆனால் நாங்கள் அடிப்பதோ கண்ணீர்புகை, வாள், நீர்த் தாரை,குண்டுகளால் அல்ல. தேர்தலின் வாக்குகள் மூலமே பாடம் கற்பிப்போம். இந்த அரசாங்கத்தை மக்கள் பலத்தால் வீட்டுக்கு அனுப்புவோம்.

எங்களுக்கு ரணில், ராஜபக்‌ஷக்களுடன் டீல் இல்லை. மேடைகளில் பகலில் விமர்சனம் செய்துவிட்டு இரவில் டீல் போடும் இரட்டைவேட குழுவல்ல நாங்கள். எங்களின் அரசாங்கத்தில் நிச்சயமாக நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்ற குழுக்களை நீதிமன்றத்தின் முன்நிறுத்தி தண்டனை வழங்குவோம். இவர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈட்டை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுப்போம்.

இன்று பொலிஸார் எங்கள் மீது மேற்கொண்ட தாக்குதல் சட்டவிரோதமானது. அரசியலமைப்பில் எங்களுக்கு மனித உரிமைகள் உள்ளன. எங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரும் தயாராக இருங்கள் நாங்கள் உங்களை சட்டத்தின் முன்கொண்டு செல்வோம். மக்கள் பலத்தில் நாங்கள் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்போம்.

அலரிமாளிகை, ஜனாதிபதி செயலகம், நிதி அமைச்சுக்குள் செல்வதற்கு தடையுத்தரவுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெட்கமில்லையா? ஆனால் எங்கள் ஆட்சியில் இந்த கட்டிடங்கள் நவீன தொழில்நுட்பங்களால் ஆன இளைஞர்களுக்கான உலகில் முன்னிலையான தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களாக மாற்றியமைப்போம் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )