
42,248 பேரைத் தேடி வேட்டை; பட்டியல் பதில் பொலிஸ் மா அதிபரிடம்
நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 42,248 சந்தேக நபர்களின் விரிவான விபரப் பட்டியலை அனைத்து பொலிஸ் நிலையங்களினதும் பொறுப்பு அதிகாரிகளிடம் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கையளித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தப் பட்டியலில் 35,505 திறந்த பிடி விறாந்து உள்ளவர்கள், 4,258 சந்தேக நபர்கள் கைரேகைகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மேலும் 2,485 பேர் கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் நடந்த குற்றங்களுக்காக தேடப்பட்டு வருகின்றனர்.
நேற்று முதல் , ‘யுக்திய’ நடவடிக்கையில் அனைத்து காவல் நிலையங்களின் பிரிவு அதிகாரிகள், மாவட்ட பொறுப்பாளர்கள், தலைமையக பொலிஸ் ஆய்வாளர்கள் (HQIs), மற்றும் குற்றப்பிரிவு OIC கள் தீவிரமாக பங்கேற்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், அடுத்த மாதத்திற்குள் தேடப்படும் சந்தேக நபர்களை கைது செய்யும் நோக்கில் 24 மணி நேரமும் காவல்துறை அதிகாரிகளை பணியில் அமர்த்துமாறு அனைத்து குற்றப்பிரிவு OIC களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்துடன் தொடர்புடைய நபர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டு வரும் ‘யுக்திய’ நடவடிக்கைக்கு மேலதிகமாக, தீவு முழுவதும் குற்றச் செயல்களைக் குறைப்பதில் தீவிரமான முயற்சிகள் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் யுக்திய சுற்றிவளைப்புகளில் 771 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 192 கிராம் ஹெரோயின், 101 கிராம் ஐஸ் மற்றும் 10,611 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
டிசம்பர் 17ம் திகதி யுக்திய சுற்றிவளைப்பு ஆரம்பமான பின்னர் இதுவரை 29,000 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

