
300 வீத வட்டியை அறவிடும் கும்பல்கள்; சிக்கி விடாதீர்கள் – சஜித் எச்சரிக்கை
நாட்டின் வங்குரோத்து நிலைமையை பயன்படுத்தி மோசடியான வகையில் திட்டமிட்டு மக்களை ஏமாற்றி பெருமளவிலான வட்டியை அறவிட்டு நுண்கடன் வழங்கும் வியாபார குழுக்கள் வெளிநாடுகளில் இருந்து வந்து இலங்கையில் செயற்படுவதாகவும் வட்டியின்றி கடன் வழங்குவதாக கூறிக்கொண்டு அதனை செய்யாது 300 வீத வட்டியை அறவிடுவதாகவும் இது தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை கூறினார்.
அதன்போது எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறுகையில்,
எமது நாடு வங்குரோத்தடைந்துள்ள நேரத்தில் வெளிநாடுகளை சேர்ந்த மோசடியான வர்த்தகர்கள் இலங்கையில் ஒன்லைன் ஊடான கடன் வழங்கும் திட்டங்களை முன்னெடுக்கின்றனர். அவர்களின் பணத்தை பயன்படுத்தியே இந்த கடன் வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். இதனால் சட்ட ரீதியான பிரச்சினைகள் உள்ளன. இவர்கள் கடனை வழங்கி பெறுமளவில் வட்டியை அறவிடுகின்றனர். பிணையாள் கையெழுத்து, சொத்து பிணை எதுவுமின்றியே அவர்கள் கடனை வழங்குகின்றனர். கடன் பெறுபவர்களின் புகைப்படங்கள், குடும்பத்தினரின் புகைப்படங்கள் ஆகியவற்றை பெற்றுக்கொள்கின்றனர்.
பின்னர் ஏதேனும் காரணத்தினால் கடனை மீளச் செலுத்தாவிட்டால் பேஸ்புக் ஊடாக கடன் பெற்றவர்களை அச்சுறுத்துவதுடன், அவர்கள் தொடர்பில் சேறுபூசும் செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர். அதேவேளை கடன் பெற்றவர்கள் கள்ளத் தொடர்புகளை வைத்திருப்பதாக கூறி குடும்பத்தினரை பிரிக்கவும் நடவடிக்கை எடுகின்றனர்.
இவ்வாறாக மோசடியான வகையில் கடனை வழங்குகின்றனர். மாடி வீடுகளில் இருந்துகொண்டு அவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரிடம் கேட்டேன். அதன்போது சட்டத்தில் சில குறைபாடுகன் இருப்பதாகவும் அவற்றை நிவர்த்தி செய்ய அடுத்து வரும் பாராளுமன்ற அமர்வில் நிதி விடயம் தொடர்பான சட்டமூலமொன்று வரும் என்றும் அதன்போது இதனை செய்ய முடியாமல் போகும் என்றும் தெரிவித்துள்ளார்.
வங்குரோத்தடைந்த நாட்டில் மக்களிடம் பணமில்லை. அவர்களிடம் பணம் இருக்கின்றது. இதன்படி வட்டியின்றி கடன் வழங்குவதாக கூறிக்கொண்டு அதனை செய்யாது 300 வீத வட்டியை அறவிடுகின்றனர். அதனை மீளச் செலுத்த தாமதமானால் தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், குடும்ப புகைப்படங்களை ஆபாசமான படங்களுடன் எடிட் செய்து சமூக ஊடகங்கள் மூலம் அவமானப்படுத்தி வருகின்றனர் . இவர்கள் வீசாவிலேயே வருகின்றனர். இவர்கள் வணிக வீசாவில் வந்துள்ளனரா? என்று ஆராய்ந்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேவேளை இவ்வாறான மோசடியாளர்களிடம் கடன் பெற்றிருந்தால் அவற்றை மீள வழங்க வேண்டாம் என்றும் கோருகின்றேன்.
இதனால் இது தொடர்பில் உடனடியாக தலையிட்டு இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன்.

