இரகசிய வாக்கெடுப்பு மூலம் தலைவர் தெரிவு; தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் தீர்மானம்

இரகசிய வாக்கெடுப்பு மூலம் தலைவர் தெரிவு; தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் தீர்மானம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் இரகசிய தேர்தல் வாக்கெடுப்பு மூலம் எதிர்வரும் 21 ஆம் திகதி தெரிவு செய்யப்படவுள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் உயர்மட்டக் குழுக்கூட்டம் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை கொழும்பிலுள்ள இரா.சம்பந்தனின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சிரேஷ்ட தலைவர் இரா. சம்பந்தன், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் பங்கேற்புடன் இடம்பெற்றது.

இதில் பங்கேற்றவர்கள் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் தெரிவில் தேர்தல் வேண்டாம் யாராவது ஒருவரை போட்டியின்றி ஏகமனதாகத் தெரிவு செய்வோம் என்ற கருத்தை வலியுறுத்தினர்.

எனினும் தலைவர் பதவிக்கான வேட்பாளர்களான ஸ்ரீதரன் , சுமந்திரன் ,யோகேஸ்வரன் ஆகியோர் தேர்தல் மூலம் தலைவர் தெரிவு இடம்பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்ததால் மூவரையும் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வருமாறு கூறி ஒரு நாள் காலஅவகாசம் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் பதவிக்காக போட்டியிடும் யாழ்மாவட்ட எம்.பி.க்களான சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் எம்.பி.யான சீ.யோகேஸ்வரன் ஆகிய மூவரும் நேற்று வியாழக்கிழமை காலை 10.45 மணியளவில் மாதிவெலவிலுள்ள, சிறீதரன் எம்.பி.யின் விடுதியில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

எனினும், இக்கலந்துரையாடலில் தமிழரசுக் கட்சியின் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பிலான இணக்கப்பாடுகள் எவையும் எட்டப்படவில்லை மூவரும் தலைவர் பதவியில் விடாப்பிடியாக நின்றதுடன் தேர்தல் வாக்கெடுப்பு மூலம் தலைவர் பதவியை தீர்மானிப்போம் என்ற முடிவுக்கும் வந்தனர்.

இதனையடுத்து திட்டமிட்டபடி எதிர்வரும் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை நகர மண்டபத்தில் நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் இளநகை தமிழரசுக்கட்சியின்தலைவர் பதவிக்கான இரகசிய வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மூவரும் தமக்கான ஆதரவு வாக்குகளைத் திரட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )