
பொதுஜன பெரமுனவில் ஆறு பேரில் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளர்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர்களாக முன்னிறுத்த ஆறு பேர் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி பாராளுமன்ற உறுப்பினர்களான பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, தினேஷ் குணவர்தன, தம்மிக்க பெரேரா மற்றும் இருவரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இது தொடர்பில் கட்சி இதுவரை உத்தியோகபூர்வமாக கலந்துரையாடவில்லை. மேலும் ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுக்கும் நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவே இது தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பொதுஜன பெரமுன கட்சி மூத்த உறுப்பினரை வேட்பாளராக நிறுத்துமா அல்லது புதியவரை நிறுத்துமா?என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் கேட்கப்பட்ட பொது,
பொதுஜன பெரமுன கட்சியின் கொள்கைகளுக்கு ஏற்ப, கட்சியின் தேவைகளுக்கு ஏற்ப ஒரு வேட்பாளரை நிறுத்தும், மேலும் கட்சி ஆதரவாளர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும். தலைமை தாங்கக் கூடிய வேட்பாளர் வயதானவரா அல்லது இளைஞரா அல்லது அரசியலில் இருப்பவரா இல்லையா என்பது முக்கியமல்ல, ஆனால் தேவைகளை பூர்த்தி செய்து சர்வதேச சவால்களை எதிர்கொள்ளக்கூடிய ஒருவரே தெரிவு செய்யப்படுவார். நாங்கள் வேட்பாளர்களை அவர்களின் தனித்துவத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பதில்லை. ஜனாதிபதித் தேர்தலுக்கு அழைப்பு விடுத்ததன் பின்னர் கட்சிக்குள் கலந்துரையாடலின் பின்னர் வேட்பாளரை தெரிவிப்போம் என்றார்.

