ஜனாதிபதிக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்; தடுத்து நிறுத்திய பொலிஸார் ;த.தே.ம.மு.முக்கியஸ்தர்கள் நால்வர் கைது

ஜனாதிபதிக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்; தடுத்து நிறுத்திய பொலிஸார் ;த.தே.ம.மு.முக்கியஸ்தர்கள் நால்வர் கைது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (04)வியாழக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்த நிலையில் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடமாகாணத்திற்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு (04) வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் ஹெலிகொப்டரில் யாழ்ப்பாணம் வருகை தந்தார்.

யாழ்ப்பாணம் புனித ஜேம்ஸ் பாடசாலை அருகே ஹெலிகொப்டரில் வந்திறங்கிய ஜனாதிபதி, வாகன தொடரணியாக மாவட்ட செயலகத்தை வந்தடைந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் (04) வியாழக்கிழமை மாலை 4.20 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. எனினும் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது

இந்நிலையில் ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் எற்பாட்டில், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் உள்ள பழைய பூங்காவுக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

”காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே, நல்லிணக்க நாடகம் போடாதே, தென்னகோனை கைது செய், மக்களின் வாழ்க்கையினை அழிக்காதே, கைதுசெய்தவர்களை விடுதலை செய், ஜனநாயக போராட்டத்தினை தடுத்து நிறுத்தாதே என்று கோஷமிட்டவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏ9 பிரதான வீதி அருகே கோஷங்களை எழுப்ப முற்பட்ட போது அதிரடிப்படை உதவியுடன் ஆர்ப்பாட்டக்காரர்களை வீதித் தடைகளைப் போட்டு பொலிஸார் தடுத்து நிறுத்தினர் .

அத்துடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணித் தலைவரும், ஆசிரியருமான இ.சத்தியசீலன், கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் பொன் மாஸ்டர் மற்றும் கட்சியின் வடமராட்சிப் பகுதி அமைப்பாளர் அருள்மதி மற்றும் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு பல பகுதிகளிலும் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகம் சுற்றியுள்ள பகுதிகள் வீதிகளில் வீதித்தடைகள் கொண்டுவரப்பட்டு முழுமையாக பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், கலகமடக்கும் படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அருகில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் மக்களை அடக்காதே, குற்றச்சாட்டுகள் உள்ள பொலிஸ்மா அதிபரை பதவியில் இருந்து நீக்கு, சட்டவிரோதமாக விகாரைகளை அமைக்காதே, பொலிஸ் அடாவடிகளை நிறுத்து எனத் தெரிவித்தார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்கத்தின் இணைப்பாளர் வேலன் சுவாமிகள் கருத்து தெரிவிக்கையில்,

இந்த அரசாங்கம் வடக்கு -கிழக்கு தமிழ் மக்களை அடக்கி ஒழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகிறது.கிழக்கில் தமிழ் மக்களின் மேய்ச்சல் தரவைகள் அபகரிப்பு, ஊடகவியலாளர்களை அச்சுறத்துதல், சிவில் செயற்பாட்டாளர்களை அச்சுறத்துதல் என இந்த அரசாங்கம் பாதுகாப்புத் தரப்பினரை வைத்து காட்டு அரசாங்கம் நடத்தி வருகிறது.

ஜனநாயக வழியில் போராட்டங்களை மேற்கொள்ளும் போது பாதுகாப்புப் படையினரை வைத்து அடக்குகிறார்கள், அச்சுறுத்துகிறார்கள். ஜனநாயக நாடு என ஜனாதிபதி கூறுவது வெட்கக்கேடு எனத் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )