மின்சார சபை முன்பாக பாரிய போராட்டம்

மின்சார சபை முன்பாக பாரிய போராட்டம்

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான உத்தேச சட்டமூலத்திற்கு எதிராக நேற்று புதன்கிழமை மின்சார சபையின் தலைமையகத்துக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் சுமார் 5000 பேர் வரையில் கலந்து கொண்டிருந்தனர்.
மின்சக்தி அமைச்சர் மற்றும் இலங்கை மின்சார சபையின் அறிவுறுத்தல்களை மீறி மேற்கொள்ளப்பட்ட இப்போராட்டத்தால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன், கொழும்பு கோட்டை நோக்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவானது.

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் சட்டமூலத்தை வாபஸ் பெறுமாறு நேற்று புதன்கிழமை முதல் 3 நாள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மூன்று நாட்களுக்கு இலங்கை மின்சார சபை தலைமை அலுவலகத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு நேற்று போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

மூன்று நாட்களுக்குள் சட்டமூலம் வாபஸ் பெறவேண்டுமெனவும் இந்த சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டால் அன்றைய தினம், இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களும் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை இந்தியாவின் அதானி அல்லது டாடா நிறுவனத்துக்கு விற்பதற்கு தீர்மானித்துள்ள ஜனாதிபதி மற்றும் காஞ்சன ஆகியோரின் வேலையே இது. இன்று துறைமுகம், எரிபொருள், தொலைத்தொடர்பு மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்கும் ரணில் – காஞ்சன ஆகியோர் 2024 ஆம் ஆண்டு கெட்ட காலமாகும். அவர்கள் ஒன்றுமில்லாமல் செல்ல வேண்டிய நிலையேற்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )