
தேர்தல் ஆண்டான 2024இல் நாட்டில் இன,மத,மொழி பிரிவினையை விதைக்க இடமளிக்கக் கூடாது
பிறந்திருக்கும் புது வருடம் தேர்தல் ஆண்டு என்பதால் தேர்தலை இலக்காகக்கொண்டு நாட்டுக்குள் இன, மத, மொழிப் பிரிவினையை விதைக்க சுயநல அரசியல்வாதிகளுக்கு இடமளிக்கக் கூடாது என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.
2024 புதுவருடத்திற்கான கடமை களை ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நீதி அமைச்சு வளாகத்தில் இடம்பெற்றபோதே அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
பிறந்துருக்கும் புதுவருடமான 2024 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டு. இந்த ஆண்டில் எந்த தேர்தல் வந்தாலும் இன, மத, மொழிப் பிரிவினையை உருவாக்க சுயநல, சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு இடமளிக்கக் கூடாது. நாட்டில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி, அமைதியான தேசத்தை அமைக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அரச ஊழியர்கள் என்றவகையில் நாங்கள் ஒவ்வாெரு வருடமும் உறுதிப்பிரமாணம் வழங்கினாலும் அரச ஊழியர்கள் தொடர்பில் மக்கள் மத்தியல் நல்லெண்ணம் இல்லை. என்றாலும் நீதி அமைச்சின் அதிகாரிகளாக நாங்கள் நாட்டில் இருக்கும் முன்மாதிரியான அமைச்சு என்பதை மக்கள் மத்தியில் உறுதிப்படுத்தி இருக்கிறோம்.
2024ஆம் வருடத்துக்குள் 60 புதிய சட்ட மூலங்களை நிறைவேற்றிக் கொள்ள தேவையான ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். சுதந்திரத்துக்கு பின்னர் நாட்டில் ஏற்பட்ட அரசியலமைப்பு புரட்சி 21ஆவது அரசியலமைப்பு திருத்தமாகும். ஊழல் எதிர்ப்பு உள்ளிட்ட பல புதிய சட்டங்களை அனுமதித்துக்கொண்டு மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை நாங்கள் ஏற்படுத்தி இருக்கிறோம்.
எனவே மதம், மொழி, இன வர்க்கமாக பிளவுபட்டு செயற்பட்டால் நாடு என்றவகையில் நாங்கள் எதிர்பார்க்கும் இலக்கை அடைய முடியாது. அதனால் 2024ஆம் ஆண்டின் முதல் வாரத்துக்குள் தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க அலுவலக சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் என்றார்.

