அடுத்த தேர்தலில் தனி வழி என்றால் மகிந்த ரணிலைப் பாதுகாப்பது ஏன்?

அடுத்த தேர்தலில் தனி வழி என்றால் மகிந்த ரணிலைப் பாதுகாப்பது ஏன்?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தமது கட்சி தொடர்ந்தும் பாதுகாப்பதற்கான காரணத்தை ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ விளக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பேச்சாளர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதன் மூலம் முன்கூட்டியே பாராளுமன்றத் தேர்தலை கட்டாயப்படுத்துவதற்கான வாய்ப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசதியாகப் புறக்கணித்ததாகவும் கூறியுள்ளார்.

கம்பஹா, கிரிந்திவெல பிரதேசத்தில் இடம்பெற்ற பொது நிகழ்வொன்றில்,அடுத்த பொதுத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதே தமது நோக்கம் எனவும்,எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றுவது தனது நோக்கம் அல்ல எனவும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளதற்கு பதிலளிக்கும் வகையில், முன்னாள் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிரதமர் தினேஸ் குணவர்தன உட்பட அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பொதுஜன பெரமுன சார்பில் தெரிவு செய்யப்பட்டவர்கள் மற்றும் அதன் தேசிய பட்டியலில் நியமிக்கப்பட்டவர்கள் என்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் வரவு செலவுத் திட்டத்திற்கு சார்பாக வாக்களித்ததன் மூலம் பொதுஜன பெரமுன தான் ரணில் விக்கிரமசிங்க அரசின் இயந்திரம் என்பது உறுதியாகியுள்ளது எனவும் வலியுறுத்தினார்.

2024 பட்ஜெட் மீதான இறுதி வாக்கெடுப்பில் ஆதரவாக 122 வாக்குகள் கிடைத்தன் மூலம் அது 41 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகிய ஐக்கிய மக்கள் சக்தியின் இருவரைத் தவிர, வரவு செலவுத் திட்டத்திற்கு சார்பாக வாக்களித்த ஏனைய அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் பொதுஜன பெரமுன கட்சியினர் எனவும் முஜிபுர் ரகுமான் தெரிவித்தார்.

இங்கு முஜிபுர் ரகுமான் மேலும் கூறுகையில்,

“முன்னாள் ஜனாதிபதியின் இதுபோன்ற அர்த்தமற்ற பேச்சுகளால் பொதுமக்களை ஏமாற்ற முடியாது. அமைச்சரவையில் உள்ளவர்களில் சிலர், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வரும் வகையில் வரி அதிகரிப்பை ஏற்படுத்தும் ரணில் விக்கிரமசிங்கவின் வருமான முன்மொழிவுகளை அங்கீகரித்த முன்னாள் ஜனாதிபதி, நியாயமான வரி விதிப்பு முறைக்கு முரண்பாடாக அழைப்பு விடுத்தார்.

நவம்பர் 14 அன்று வழங்கப்பட்ட அடிப்படை உரிமை விண்ணப்பங்கள் தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பை பொதுஜன பெரமுன தலைவர் மிகவும் வசதியாக மறந்துவிட்டார்எனவும் கூறினார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த ரகுமான், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆசீர்வாதத்துடன் உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஜனாதிபதி விக்ரமசிங்க காலவரையறையின்றி தள்ளி வைத்ததாக குற்றம் சாட்டினார்.

விக்கிரமசிங்கவின் மூலோபாயத்தில் பிரதமர் கணிசமான பங்கைக் கொண்டிருந்தார். தற்போதைய அரசாங்கத்தின் சூழ்ச்சிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )