
காணிகள் விடுவிப்புத் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி பச்சைக் கொடி காட்டுவார்
யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விஜயத்தின் போது, காணிகள் விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பச்சைக் கொடி காட்டப்படும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
வனவள பாதுகாப்பு, வன ஜீவராசி திணைக்களம் என்வற்றின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள காணிகளை விடுவிப்பு தொடர்பில் 11 கட்டங்கள் இருந்தன. அதில் 4 கட்டமே பூர்த்தியாகியுள்ளது. ஏனைய கட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அவைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் 100 வீதம் சரிவரும் என்ற நம்பிக்கை உண்டு.
உயர்பாதுகாப்பு வலயமாக படைத்தரப்புக்களின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்க தொடர்ந்து முயற்சிக்கிறேன். முடிந்த வரையில் அந்தக் காணிகளை விடுவிக்க நடவடிக்கைகளை எடுப்பேன்.
ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரும் வேளையில் காணிகளை விடுவிப்பார் அல்லது அது தொடர்பில் பச்சை கொடியை காட்டுவார் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை, ஜனாதிபதியுடனான கடந்த வார சந்திப்பில் ஏன் கலந்து கொள்ளவில்லை என அமைச்சரிடம் கேட்ட போது,
வடக்கில் எம் மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவைகள் நிறைய இருந்தமையால் நான் வடக்கில் தங்கி இருந்தேன். அதனால் சந்திப்புக்குச் செல்லவில்லை. எனினும் ஜனாதிபதியுடன் மக்களுக்காக தொலைபேசியில் கதைக்கக் கூடிய நிலையில் உள்ளேன். பல்வேறு தடவைகள் கதைத்தும் உள்ளேன்.
என் கட்சி சார்பில், கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் சந்திப்பில் கலந்து கொண்டார் எனப் பதிலளித்தார்.

