
பகிரங்க விவாதத்துக்கு நான் தயார், நீங்க தயாரா?
அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் மற்றும் நிலக்கரி தொடர்பில் ஜே .வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க என்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வரலாம் அப்படி வந்தால் நாட்டு மக்கள் அவரது அறிவை அறிந்து கொள்வார்கள் என வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் முதலீட்டு மேம்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
ஜே .வி.பி.யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க எரிபொருள்,மின்னுற்பத்தி கட்டமைப்பு தொடர்பில் குறிப்பிட்ட விடயங்கள் அடிப்படையற்றவை.புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் தொடர்பிலான திட்டங்கள் விலைமனுகோரல் இல்லாமல் முன்னெடுக்கப்படவில்லை என்று அவர் கூறுவது அடிப்படையற்றது.
எரிபொருள் மற்றும் நிலக்கரி கொள்வனவு தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.நான் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் மற்றும் நிலக்கரி தொடர்பில் பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளேன். முறைகேடுகள் ஏதும் இடம்பெற்றிருக்குமாயின் ஜே .வி.பி.யின் தலைவர் நீதிமன்றத்தை நாட முடியும்.
எரிபொருள் மற்றும் நிலக்கரி தொடர்பில் ஜே .வி.பி.யின் தலைவர் என்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வரலாம்.அப்படி வந்தால் நாட்டு மக்கள் அவரது அறிவை அறிந்துக் கொள்வார்கள்.ஊழல் மோசடி செய்தவர்கள் தொடர்பான கோப்பு தன்னிடம் உள்ளதாக குறிப்பிட்டார்.ஆனால் இதுவரை ஊழல் மோசடி செய்ததாக குறிப்பிடப்படும் தரப்பினருக்கு எதிராக அவர் ஏன் வழக்கு தாக்கல் செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்

