
மன்னார் தீவை பெரும் ஆபத்து சூழ்ந்து வருகிறது பிரஜைகள் குழு மக்களை அறிவுறுத்துகிறது
மன்னார் தீவில் ஏற்படவுள்ள மிகப்பெரிய அழிவுகளுக்கு அரசும் துணை போகின்றதா?என்ற சந்தேகம் மக்கள் மத்தியிலும்,எங்கள் மத்தியிலும் எழுந்துள்ளது என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.
மன்னார் பிரஜைகள் குழுவில் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார்தீவு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறது.அவற்றில் முக்கியமாக பாரிய கனிய மண் அகழ்வுத் திட்டம் மற்றும் எல்லை மீறிய காற்றாலை கோபுரங்கள் மற்றும் காடழிப்பு போன்றவை காணப்படுகின்றன.
எனினும் மண் அகழ்வு தொடர்பாக பல்வேறு விடயங்களை முன் வைக்க விரும்புகின்றோம்.மணல் அகழ்வில் ஈடுபடுகின்ற தொழிற்சாலைகள் சம்மந்தமாக விழிப்புணர்வுகள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த கனிய மணல் அகழ்வு மன்னார் தீவுக்கு பேராபத்தாகி மன்னார் தீவை கடலுக்குள் மூழ்க வைத்து விடும்.
குறிப்பாக ,மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிவதற்காக அரச தரப்புடன் தொடர்பு கொள்ள பல்வேறு முயற்சிகளை கடந்த வருடம் நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.ஆனால் அரச தரப்பிடம் இருந்து இது வரை எந்த விதமான பதில்களும் எமக்கு கிடைக்கவில்லை.
பல ஆண்டுகளாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் இவ் விடயம் தொடர்பாக வினவிய போதும், விளக்கம் கோரிய போதும் எவ்வித பதிலும் எமக்கு கிடைக்கவில்லை.
மேலும், மன்னார் பிரதேச செயலகத்திடமும் பல்வேறு விதமான விளக்கங்களை நாங்கள் கேட்டிருந்த போதும் எவ்வித பதிலும் எமக்கு வழங்கப்படவில்லை.
இவ்விடயம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஊடாக நாங்கள் தகவல்களை பெற்றுக்கொள்ள முயற்சித்தோம். விளக்கம் கோரி பல்வேறு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டன.ஆனால் இதுவரை அந்த விண்ணப்பங்களுக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.
ஏற்படவுள்ள மிகப்பெரிய அழிவில் அரசும்,சம்மந்தப்படுகின்றதா?என்ற சந்தேகம் மக்கள் மத்தியிலும்,எங்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
அவற்றை தெளிவாக நாங்கள் கூறி கொள்ள விரும்புகின்றோம்.29-12-2021 அன்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இதற்காக விளக்கம் கேட்டு நாங்கள் எழுதி இருந்தோம்.
அதற்காகான பதிலை 10-01-2022 அன்று வழங்கி இருந்தார்கள் கோரிய விளக்கங்களை வழங்குவதாக தெரிவித்திருந்தனர்.ஆனால் எவ்வித பதிலும் இல்லை.
தொடர்ந்தும் பல தடவைகள் விளக்கம் கோரி கடிதம் எழுதி இருந்தோம்.எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.இவ்வாறான நடவடிக்கைகள் எமக்கு கவலையளிக்கின்றது.மன்னாரை மிகவும் ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்கின்றனர்.
பல்வேறு முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டுள்ள போதும் இதற்கான எவ்வித நடவடிக்கைகளும் அரசினால் முன்னெடுக்கப்பட வில்லை என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

