
ஐ.தே.க.வுக்கு இப்போதும் 1 வீத வாக்கு வங்கியே
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் நாட்டில் 1 வீத வாக்கு வங்கியை மாத்திரம் கொண்டிருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சி வீழ்ச்சியடைந்த பின்னர் முன்னேற்றம் அடையவில்லை எனவும் குறிப்பிட்டார்.
அடுத்த வருடம் நடைபெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திட்டம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள ஏனைய அரசியல் கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியவையும் அவற்றின் வாக்காளர் தளத்தில் சரிவை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலத்தில் கடுமையான சிரமங்களை எதிர் கொண்ட போதிலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மட்டுமே வலுவாக வளர்ந்து வரும் ஒரே கட்சியாகும் என்றும் முன்பு ஆட்சிக்கு வருவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 69 இலட்சம் வாக்காளர்களில் குறைந்த பட்சம் பாதியையாவது பெற்றுக்கொள்ள முடியுமெனவும் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றுடன் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்தாலும், அது இன்னும் 1 வீத வாக்காளர் தளத்தையே கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

