சுகாதார அமைச்சை வழங்கி மகிந்த ஆட்சியில் என்னை வீழ்த்த சதி செய்தனர்

சுகாதார அமைச்சை வழங்கி மகிந்த ஆட்சியில் என்னை வீழ்த்த சதி செய்தனர்

மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் என்னை வீழ்த்துவதற்கே சுகாதார அமைச்சை எனக்கு வழங்கினார்கள். ஆனால் நான் அந்த அமைச்சை பயன்படுத்தியே ஜனாதிபதியானேன் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியும் எம்.பி.யுமான மைத்திரி பால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

சுகாதாரத்துறையில் பல்வேறு பிரிவுகளுக்கு கேள்வி மனுக்கோரல்கள் இடம்பெறுகின்றன. ஒவ்வாெரு கேள்வி மனுக்கோரல்களும் பல கோடி ரூபாவுக்கே இடம்பெறுகிறது. ஆனால் சுகாதாரத்துறை உள்ளிட்ட நாட்டில் இடம்பெறுகின்ற அதிகமான கேள்வி மனுக்கோரல்கள் அதிக ஊழல் மோசடிமிக்கவை . அதனால் இந்த கேள்வி மனுக்கோரல் முறை முற்றாக மாற்றப்படவேண்டும்.

மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் என்னை வீழ்த்துவதற்கே சுகாதார அமைச்சை எனக்கு வழங்கினார்கள். ஆனால் சுகாதார அமைச்சை பொறுப்பெற்று நான் சுகாதார அமைச்சை சிறந்த முறையில் முன்னெடுத்ததாலேயே என்னால் நாட்டின் ஜனாதிபதியாக முடிந்தது.

2015இல் நான் ஜனாதிபதியான காலத்தில் நாட்டில் 40 வருடங்களுக்கும் அதிக காலம் மருத்துவ துறையில் பேசப்பட்டு வந்த கலாநிதி சேனக்க பிபிலேயின் கொள்கைக்கு அமைய மருந்து கொள்கையை அமைத்து பாராளுமன்றத்தில் அனுமதி பெற்றேன்.ஆனால் தற்போது அந்த மருந்து கொள்கைக்கு என்ன நடந்தது என தெரியாது.

தரம் குறைந்த மருந்து பொருட்கள் நாட்டுக்குள் கொண்டுவருவது மற்றும் ஏனைய மருந்து வகைகள் தொடர்பில் சிறந்த தீர்வுகள் அந்த சட்டத்தில் இருக்கின்றன. அதனால் தற்போது வீழ்ச்சியடைந்து செல்லும் சுகாதார துறையை பாதுகாக்க சேனக்க பிபிலே கொள்கைக்கு அமைய தயாரிக்கப்பட்ட மருந்து கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்.

வைத்தியர் பற்றாகுறை தொடர்பாக தற்போது பேசப்பட்டு வருகிறது. இதன் காரணமாக 40க்கும் மேற்பட்ட பிரதேச வைத்தியசாலைகள் மூடப்படும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. பதிவு செய்யப்பட்ட வைத்தியர்களே இவ்வாறு கஷ்டப்பிரதேசங்களில் பிரதேச வைத்தியசாலைகளுக்கு சென்று பணி புரிந்து வருகின்றனர். ஆனால் 1996இல் இவர்களின் சேவையை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும். இவர்களே இதனை மேற்கொண்டனர் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )