
ரொஷானை நீக்கியது முதல் அரசின் அழிவு ஆரம்பம்
அப்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ என்னையும்,உதய கம்மன்பிலவையும் அமைச்சு பதவியில் இருந்து நீக்கினார்.அதுவே அவரது அரசாங்கத்தின் அழிவுக்கு ஆரம்ப புள்ளியானது. இந்த அரசாங்கத்தின் அழிவு ரொஷான் ரணசிங்கவை அமைச்சு பதவியில் இருந்து நீக்கியது முதல் ஆரம்பமாகியுள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் சுயாதீன எதிரணி எம்.பி.யுமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்த்தில் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
கிரிக்கெட் துறையின் ஊழல் மோசடியை வெளிப்படுத்தி, தற்றுணிவுடன் செயற்பட்டதால் விளையாட்டுத்துறை,இளைஞர் விவகாரம் மற்றும் நீர்பாசனத்துறை அமைச்சு பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டார்.
கோத்தபாயவின் நிர்வாகம் மோசமானது என்று குரல் எழுப்பப்பட்டதால் தான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி மகுடம் சூட்டப்பட்டது.ஆனால் இன்று அனைத்தும் தலைகீழாக உள்ளது. போராட்டத்தின் ஊடாக ஜனாதிபதி மகுடம் சூடிய ரணில் விக்கிரமசிங்க தனது உண்மை முகத்தை திங்கட்கிழமை காண்பித்துள்ளார்.
பொருளாதார பாதிப்பு தொடர்பில் கவனம் செலுத்தாமல் சிறுப்பிள்ளை போல் கடந்த அரசாங்கம் செயற்பட்ட போது அதனை சுட்டிக்காட்டினோம். அதனால் அப்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ என்னையும்,உதய கம்மன்பிலவையும் அமைச்சு பதவியில் இருந்து நீக்கினார்.அதுவே அவரது அரசாங்கத்தின் அழிவுக்கு ஆரம்ப புள்ளியானது அரசாங்கத்துக்கும்,மக்களுக்குமிடையிலான தொடர்பு முறிந்தது .இந்த அரசாங்கத்தின் அழிவு ரொஷான் ரணசிங்கவை அமைச்சு பதவியில் இருந்து நீக்கியது முதல் ஆரம்பமாகியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டார் என்பதை தெளிவாக கூறுகின்றேன்.தற்போதைய நெருக்கடி சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சர்வதேச நிறுவனங்களில் உயர் பதவியை பெற்றுக்கொள்வார்.நாட்டின் எதிர்காலம் குறித்து அவருக்கு அக்கறையில்லை என்றார்.