
மத்திய வங்கிப் பெட்டகத்தில் 50 இலட்சம் ரூபாவை காணவில்லை
இலங்கை மத்திய வங்கியின் ‘நாணய வழங்கல் பெட்டகத்தில்’ வைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபா காணாமல் போயுள்ளமை தொடர்பில் தீவிர புலனாய்வு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சி எம்.பி.யான நிரோஷான் பெரேரா இலங்கை மத்திய வங்கியின் ‘நாணய வழங்கல் பெட்டகத்தில்’ வைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபா காணாமல் போனமை தொடர்பில் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மேலும் கூறுகையில்,
இலங்கை மத்திய வங்கியின் ‘நாணய வழங்கல் பெட்டகத்தில்’ வைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபா காணாமல் போயுள்ளது உண்மைதான் .இதற்கு பொறுப்புக் கூற வேண்டிய உத்தியோகத்தர்களை அடையாளம் காண்பதற்காக புலனாய்வு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொழும்புக் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஊடாகவும்,மத்திய வங்கியின் உதவி ஆணையாளர் ஊடாகவும் உள்ளக மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.விசாரணைகளின் முடிவில் தான் யார் 50 இலட்சத்தை கையகப்படுத்தியது என்பதை அறிய முடியும்.அது தொடர்பான அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.
இலங்கை மத்திய வங்கியின் ‘நாணய வழங்கல் பெட்டகத்தில்’ பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்படவில்லை.அத்துடன் மத்திய வங்கியின் பாதுகாப்பு கமரா கட்டமைப்பில் பதிவாகியுள்ள காட்சிகள் புலனாய்வு விசாரணை நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளன.
மத்திய வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ள பணத்தைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்திய வங்கியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.நாணய வழங்கல் பெட்டகத்திலிருந்து நாணயத்தை எடுக்கும் போது பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்றார்.