மாகாண சபைகளையும் நிறைவேற்றுத்துறை ஆக்கிரமித்துள்ளது

மாகாண சபைகளையும் நிறைவேற்றுத்துறை ஆக்கிரமித்துள்ளது

மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகள் நிறைவேற்றுத்துறை அதிகாரத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. பிரதமர் தனது அரசியல் கொள்கையை தனது பள்ளி தோழனுக்காக பலிகொடுக்கக் கூடாது என சுயாதீன எதிரணி எம்.பி.யான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்த்தில் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

மாகாண சபைத் தேர்தலை போன்று அடிப்படையற்ற காரணிகளை குறிப்பிட்டுக் கொண்டு உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தற்போது பிற்போடப்பட்டுள்ளது. ஜனநாயக சூழலுக்கு மத்தியில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தற்போது பிற்போடப்பட்டுள்ளமை ஜனநாயகத்துக்கு எதிரானது .மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகள் நிறைவேற்றுத்துறை அதிகாரத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் பிற்போடப்பட்டுள்ள நிலையில் தேர்தல் சட்ட மறுசீரமைப்பு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டு,அதற்கான பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பான குழு நியமிக்கப்பட்டது.அந்த குழு 30 முறை கூடி பரிந்துரைகளை முன்வைத்தது.அதனை தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறிதொரு குழு நியமிக்கப்பட்டது.அதன் பின்னர் 2021 ஆம் ஆண்டு மூன்றாவது குழு நியமிக்கப்பட்டது.இந்த குழு 20 முறை கூடியது.பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.ஆனால் தேர்தல் நடத்தப்படவில்லை.

2003,2006 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் தேர்தல் திருத்த முறைமை தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுக்களின் தலைவராக தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன பதவி வகித்தார்.ஜனநாயக அம்சங்களை பாதுகாக்க ஆரம்ப காலத்தில் இருந்து முன்னிலையான பிரதமர் தினேஷ் குணவர்தனவை அவரது பள்ளித் தோழர் இன்று நெருக்கடிக்குள்ளாக்கி விட்டார்.

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல் திருத்த முறைமை தொடர்பில் முன்னாள் பிரதம நீதியரசர் தலைமையில் 9 பேர் அடங்கிய குழுவை நியமித்துள்ளார்.மறுபுறம் அரசியல் கட்சி தலைவர்களை ஒன்றிணைத்து பிரதமர் மற்றும் நீதியமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.கடந்த 25 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் தேர்தல் முறைமை திருத்தத்துக்காக 10 குழுக்கள் நியமிக்கப்பட்டன,அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. பரிந்துரைகளால் தேர்தல்கள் மாத்திரமே பிற்போடப்பட்டதே தவிர தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை. பிரதமர் தனது அரசியல் கொள்கையை தனது பள்ளி தோழனுக்காக பலிகொடுக்க க்கூடாது என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )