
நட்பு!!
தோழி….!!
புத்தகத்தில்
மறைத்து வைத்த மயிலிறகு
குட்டி போடும்
என்ற
காலம் முதல்…..
தலையெல்லாம்
மை தடவி…
இளமையாக்கி…
எழில் கொஞ்சும்
காலம் வரை…..
நீயும் நானும்
அழகாய் அறிந்த வார்த்தை
நட்பு….
கடலைக் கூட
கடக்கலாம்
கடல் நீர் படாமல்.
ஆனால்….
ஒரு பொழுதும்
கண்ணீர் படாமல்
வாழ்க்கையைக்
கடந்து விட முடியாது!!
என்
தலையணைக்குக் கூட
தெரியாது
என் கண்ணீரின் அளவு.
என் கைகுட்டைக்கு கூட
தெரியாத
விழியின் வலி.
அனைத்தையும் அறிந்தவள் நீ!
நீ மட்டுமே!!
நான் தோற்றுப்போன
பொழுதுகளிலெல்லாம்
தோள் கொடுத்தவள் நீ!
என் விழி நீரை
துடைத்த
உன் விரல்கள்கூறும்
நம் நட்பின் ஆழத்தை!!
என் முதுகின் பின்னே
தெரியும்
என் வெற்றி… அது
நீ அளித்த பரிசு.
வள்ளலாரின் வரிகள் போல்
நான் வாடிய போது…
நீயும்வாடினாய்.
பஞ்சுக் காய்கள்
வெடித்து
பறப்பதை போல்
நாம் பறந்த காலம்
ஒன்று உண்டு.
தெய்வத்திடம்
நான் வேண்டும்
ஒரேயொரு வேண்டுதல்….
நாம் சுவாசிக்கும் காலம் வரை
நம் நட்பு தொடர வேண்டும்.
தொடர்ந்திட வேண்டும்.
-முல்லை பாஸ்கர்