முஸ்லிம் பலதார மணம் இந்தியாவில் பெரிய பிரச்னையா? அதற்கு எதிராக வழக்கு ஏன்?

முஸ்லிம் பலதார மணம் இந்தியாவில் பெரிய பிரச்னையா? அதற்கு எதிராக வழக்கு ஏன்?

28 வயதான முஸ்லிம் பெண் ஒருவர் தனது எழுத்துப்பூர்வ அனுமதியின்றி தனது கணவர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்வதைத் தடுக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதன் மூலம், இந்திய முஸ்லிம்கள் மத்தியில் நிலவும் பலதார மணம் செய்யும் வழக்கம் மீண்டும் ஒருமுறை கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த பிற்போக்கான பலதார மணத்தை கட்டுப்படுத்த சட்டம் இயற்றும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ரேஷ்மா உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரேஷ்மா, முகமது ஷோயப் கானை 2019 ஜனவரியில் திருமணம் செய்து கொண்டார். அடுத்த ஆண்டு நவம்பரில் அவர்களுக்கு குழந்தை பிறந்தது என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. குடும்ப வன்முறை, கொடூரமான நடத்தை, துன்புறுத்தல் மற்றும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை ரேஷ்மா, கணவர் மீது சுமத்தியுள்ளார்.

ரேஷ்மா மீது அவரது கணவரும் இதே போன்ற குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். கணவர் தன்னையும் குழந்தையையும் கைவிட்டுவிட்டு வேறு திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக ரேஷ்மா குற்றம் சாட்டியுள்ளார்.

தனது கணவரின் செயல்களை ‘அரசியலமைப்புக்கு எதிரானது, ஷரியாவுக்கு எதிரானது, சட்டவிரோதமானது, தன்னிச்சையானது, கடுமையானது, மனிதாபிமானமற்றது மற்றும் காட்டுமிராண்டித்தனமானது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் பெண்களின் முன்னேற்றத்திற்காக பலதார மணம் செய்யும் நடைமுறையை ஒழிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

முஸ்லிம்கள், பழங்குடிகள்

டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன் வந்த இந்த வழக்கு, முஸ்லிம்கள் மற்றும் சில பழங்குடியினக் குழுக்களிடையே காணப்படும் பலதார மணம் பற்றிய விவாதத்தை தொடங்கியுள்ளது.

உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட இரண்டு சதவிகிதம் பேர், பலதார மணம் நிகழ்ந்த குடும்பங்களில் வாழ்கின்றனர் என்று பியூ ஆராய்ச்சி மையம் தனது 2019 ஆம் ஆண்டின் அறிக்கையில் தெரிவித்துள்ளது. துருக்கி மற்றும் துனீஷியா போன்ற முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் இந்த நடைமுறை இப்போது தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலும், எங்கு அனுமதிக்கப்படுகிறதோ, அங்கும் இது பெரிய அளவில் ஒழுங்குபடுத்தப்படுகிறது. ‘பெண்களுக்கு எதிரான ஏற்றுக்கொள்ள முடியாத பாகுபாடு’ என்று ஐக்கிய நாடுகள் சபை பலதார திருமண நடைமுறையை விவரிக்கிறது. இந்த நடைமுறையை ‘நிச்சயமாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்’ என்பது அதன் வேண்டுகோள்.

இருப்பினும், இந்தியாவில் இந்த விவகாரம் அரசியல் ரீதியாக மிகவும் சூடாகிவிட்டது. பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் இந்து தேசியவாத அரசாங்கம், நாடு முழுவதும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்தப்போவதாக உறுதியளித்துள்ளது.

இந்தியாவில் இந்த சட்டத்தின் முன்மொழிவு கடந்த ஏழு தசாப்தங்களாக மிகவும் சர்ச்சைக்குரியதாக உள்ளது. ஏனென்றால், அது உருவான பிறகு, திருமணம், விவாகரத்து மற்றும் சொத்துக்களின் வாரிசு விதிகள் வெவ்வேறு மதங்களின் சட்டங்களால் தீர்மானிக்கப்படுவதற்குப் பதிலாக ஒரே சட்டத்தால் தீர்மானிக்கப்படும்.

தற்போது நாட்டில் இனம் சார்ந்த பிளவு தீவிரமாக உள்ளது. இப்படிப்பட்ட நிலையில், இந்தப் பிரச்னையில் மத்திய அரசு செய்யும் எந்த ஒரு மாற்றத்தையும், தங்கள் மதத்தின் மீதான தாக்குதலாகவே இந்திய முஸ்லிம்களில் பெரும்பாலானோர் கருதுவார்கள் என்பது உறுதி.

முஸ்லிம்கள் எத்தனை சதவீதம்?

“முஸ்லிம்களில் ஏறக்குறைய பாதி பேருக்கு நான்கு மனைவிகள் மற்றும் பல குழந்தைகள் இருப்பார்கள் என்றும் இதன் காரணமாக முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து, ஒரு நாள் இந்துக்களின் எண்ணிக்கையை அது மிஞ்சிவிடும் என்றும் மக்கள் மத்தியில் பொதுவான நம்பிக்கை உள்ளது. ஆனால் இது உண்மையல்ல,” என்று நாட்டின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரும், இஸ்லாம் குறித்த நிபுணருமான டாக்டர். எஸ்.ஒய்.குரேஷி குறிப்பிட்டார்.

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையான 140 கோடியில், முஸ்லிம்கள் 14 சதவிகிதம் மட்டுமே. இந்துக்கள் 80 சதவிகிதம்.

முஸ்லிம் ஆண்கள் நான்கு பெண்களை திருமணம் செய்துகொள்ளலாம். பலதார மணம் இஸ்லாமியர்களுக்கு குர்ஆனால் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு ‘கடுமையான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை’ விதித்துள்ளது. உன்னிப்பாக கவனித்துப் புரிந்து கொண்டால், அந்த நிபந்தனைகளை நிறைவேற்றுவது ஏறக்குறைய சாத்தியமற்றது என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.

“ஒரு ஆண் இரண்டாவது, மூன்றாவது அல்லது நான்காவது முறையாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று குர் ஆன் கூறுகிறது. ஆனால் இந்த மூன்று முறையும், ஆதரவற்ற அல்லது கணவனை இழந்த பெண்களை மட்டுமே மணம் செய்துகொள்ள முடியும். ஒரு ஆண் தனது எல்லா மனைவிகளையும் சமமாக நடத்த வேண்டும். இதைத் தவிர வேறு எல்லாமே அனுமதியை மீறுவதாகும்,” என்று குரேஷி கூறுகிறார்.

“எல்லா மனைவிகளையும் சமமாக நடத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது,” என்று அவர் கூறுகிறார்.இது எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஆடைகள் வாங்குவது போன்றதல்ல, அதைவிடப் பெரிய விஷயம் என்கிறார் அவர்.

பலதார மணம் அனுமதிக்கப்பட்ட பின்னணி என்ன?

7 ஆம் நூற்றாண்டில் அரேபியாவில் பழங்குடிகள் இடையிலான போரில் நிறைய இளம் ஆண்கள் கொல்லப்பட்டபோது, கணவனை இழந்தவர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக பலதார திருமண முறை அனுமதிக்கப்பட்டு, அது குர்ஆனில் சேர்க்கப்பட்டது என்று குரேஷி சுட்டிக்காட்டுகிறார். இத்தகைய சூழ்நிலை இல்லாத நிலையில் குர்ஆன் பலதார மணத்தை ஊக்கப்படுத்தவில்லை, அதை நல்லது என்று கருதவில்லை” என்று அவர் கூறுகிறார்.


இந்தியாவில் இன்று எந்தப்போரும் நடக்கவில்லை. எனவே இந்த ‘பெண்களுக்கு எதிரான, ஆணாதிக்க’ வழக்கம் நிறுத்தப்பட வேண்டும் என்று பலதார மணத்தை விமர்சிப்பவரும், பெண்களின் உரிமைகளுக்காகப் பாடுபடுபவருமான ஜாக்கியா சோமன் குறிப்பிட்டார்.

மும்பையை தளமாகக் கொண்ட பாரதிய முஸ்லிம் மஹிலா அந்தோலனின் (பிஎம்எம்ஏ) நிறுவனர் ஜாகியா சோமன், பலதார மணம் “தார்மீக ரீதியாகவும், சமூக ரீதியாகவும், சட்டரீதியாகவும் வெறுக்கத்தக்கது” என்றார். ஆனால் அது சட்டப்படி செல்லுபடியாகும் என்பது மிகப்பெரிய பிரச்சனை என்கிறார் அவர்.

“ஒரு ஆணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருக்க முடியும் என்று எப்படிச் சொல்வது? முஸ்லிம் சமூகம் காலத்திற்கு ஏற்றவாறு மாற வேண்டும். இன்றைய காலகட்டத்தில் இந்தப் பழக்கம் எந்தவொரு பெண்ணின் கண்ணியத்தையும் அவர்களின் மனித உரிமைகளையும் நேரடியாக மீறுவதாகும்,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பலதார மணத்தில் உள்ள பெண்கள் நிலை என்ன?

2017 ஆம் ஆண்டில், BMMA பலதார மண உறவுகளில் வாழும் 289 பெண்களை நேர்காணல் செய்து அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டது. இவர்களில் 50 பெண்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் உடல், மனம், உணர்ச்சிகள் மற்றும் நிதி நிலை குறித்த அறிக்கையை வெளியிட்டது.

” இந்தப்பெண்கள் பெரும் அநீதியான சூழ்நிலைகளில் சிக்கியிருப்பதைக் கண்டோம். அவர்கள் ஆழ்ந்த அதிர்ச்சியில் இருந்தனர். இதன் காரணமாக அவர்களுக்கு பல மனநலப் பிரச்சனைகளும் ஏற்பட்டன,”என்றார் ஜாக்கியா சோமன்.

ஜாக்கியா சோமன், பாரதிய முஸ்லிம் மஹிலா அந்தோலனின் (பிஎம்எம்ஏ) நிறுவனர்

இஸ்லாத்தில் உடனடி முத்தலாக் வழங்கும் சர்ச்சைக்குரிய நடைமுறைக்கு எதிராக கடுமையான பிரச்சாரத்தைத் தொடங்கிய BMMA, பலதார மணத்தை தடை செய்யக் கோரி 2019 ஆம் ஆண்டிலேயே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

சட்டத்தை மாற்றுவதில் சவால்கள் என்ன?

வழக்கறிஞரும் பாஜக தலைவருமான அஸ்வினி குமார் துபே, இந்த வழக்கில் உள்ள பல சட்ட சவால்களில் ஒன்றைக் குறிப்பிடுகிறார். இந்த வழக்கத்தைத்தடை செய்வது தங்கள் மதத்தில் தலையிடுவதாக உள்ளது என்று இந்தியாவின் பழமைவாத முஸ்லிம்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், நீதிமன்றத்தில் துபேயின் மனுவை எதிர்க்கிறது.”இஸ்லாத்தில் உள்ள சட்டங்கள் அல்லாவால் உருவாக்கப்பட்டவை. குர்ஆன் மற்றும் ஹதீஸில் இருந்து வழிமுறைகளை எடுத்துக் கொள்கிறோம். அல்லாவால் உருவாக்கப்பட்ட சட்டத்தை மாற்ற யாருக்கும் உரிமை இல்லை,”என்று அதன் மகளிர் பிரிவு தலைவர் டாக்டர் அஸ்மா ஜோஹ்ரா கூறினார்.

முஸ்லிம்கள் பல திருமணங்கள் செய்துகொள்வது அரிது என்றும் அது ஒரு பிரச்சனையே இல்லை என்றும் அவர் கூறுகிறார். “முஸ்லிம்கள் மீது ஆதிக்கம் செலுத்த பெரும்பான்மைவாத அரசியல் செய்வதாக,” அவர் பாஜக மீது குற்றம் சாட்டினார்.

‘நான்கு மனைவிகளுடன் ஒரு முஸ்லிம் ஆணை நீங்கள் எப்போதாவது சந்தித்திருக்கிறீர்களா? இன்றைய சூழலில் ஒரு மனைவியுடன் வாழும் செலவை தாங்குவதே கடினம், நான்கு பேரை மணந்துகொண்டு செலவுகளை எப்படி சமாளிப்பது என்று பெரும்பாலான ஆண்கள் சொல்கிறார்கள். முஸ்லிகளிடையே பலதார மணம் மிகவும் குறைவு,” என்று அவர் தெரிவித்தார்.

அவரது கூற்று மற்ற எல்லா மதங்களிலும் நிலவும் பலதார மண புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டது. 1961 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், ஒரு லட்சம் திருமணங்களை மாதிரியாகக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், இஸ்லாமியர்களிடையே பலதார மணத்தின் சதவிகிதம் வெறும் 5.7% மட்டுமே. இது பிற மதங்களில் காணப்படுவதைக் காட்டிலும் மிகக் குறைவு.

இருப்பினும், அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் இது தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படவில்லை. 2005-06 இல் நடத்தப்பட்ட தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பில் (NFHS-3) பலதார மணம் பற்றிய மிக சமீபத்திய தரவு கிடைத்தது. எல்லா மதங்களிலும் பலதார மணம் வெகுவாக குறைந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )