
இலங்கை கிரிக்கெட்டை சீரழிக்கும் இந்தியர்
இலங்கை கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் (பி.சி.சி.ஐ.) செயலாளர் ஜெய் ஷா மீது முன்னாள் இலங்கை அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) அதிகாரிகளுடன் அவர்கள் கொண்ட நெருங்கிய தொடர்பே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு அடிபணியும் சூழ்நிலையை உருவாக்கியது.
இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுக்கும் ஜெய் ஷாவிற்கும் இடையே உள்ள தொடர்பு காரணமாக, இலங்கை கிரிக்கெட்டை மிதித்து கட்டுப்படுத்த முடியும் என்ற எண்ணத்தில் அவர்கள் உள்ளனர்.
“ஜெய் ஷா இலங்கை கிரிக்கெட்டை நடத்துகிறார். ஜெய் ஷாவின் அழுத்தத்தால் இலங்கை கிரிக்கெட் பாழாகிறது. இந்திய நபர் ஒருவர் இலங்கை கிரிக்கெட்டை சீரழிக்கிறார்” என்று அர்ஜுன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை,கிரிக்கெட் திருடர்கள் ஒன்று சேர்ந்து நமது நாட்டில் கிரிக்கெட்டை தடை செய்யத் திட்டம் தீட்டுகிறார்கள். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற விவாதத்தின் பின்னர்,இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வாடகை செலுத்தும் சினமன் ஹோட்டலில் உள்ள ஒரு அலுவலகத்தில் கள்ளக் கூட்டாளிக் கும்பல் ஒன்று கூடி,எப்படியேனும்,இந்தியாவில் ஷாவுடன் பேசி 72 மணி நேரத்திற்குள் நமது கிரிக்கெட் அணிக்கு சர்வதேச அளவில் தடை விதிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
நிர்வாகத்தில் அரசியல் தலையீடு இருப்பதாகக் கூறி, சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை கிரிக்கெட்டை தடை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

