சமஷ்டி தீர்வே தமிழர்களை நிம்மதியாக வாழ வைக்கும்

சமஷ்டி தீர்வே தமிழர்களை நிம்மதியாக வாழ வைக்கும்

சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு கிடைக்கப்பெறும் பட்சத்திலேயே வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் நிம்மதியாகவும், சுயமாகவும் தமக்கான அடையாளத்ததுடன் வாழ முடியும் என வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கையில் வடக்கு, கிழக்கு தமிழரின் இணைப்பாட்சி (சமஷ்டி) கோரிக்கையின் தோற்றம் தொடர்பான கண்காட்சி மற்றும் வரலாற்றுத் தெளிவூட்டல் நிகழ்வு யாழ்ப்பாணம் சங்கிலியன் (கிட்டு) பூங்காவில் இன்று இடம்பெற்றது.

இதுகுறித்து வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்ட ஊடக அறிக்கையிலையே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கடந்த 2022ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வு வேண்டிய எமது 100 நாள் செயல்முனைவின் இறுதி நாளான 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 08ம் திகதி அன்று வடக்கு கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வாக “ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு” வேண்டும் எனும் மக்கள் பிரகடனம் வெளியிடப்பட்டிருந்தது.

அந்த வகையில் இப்பிரகடனம் வெளியிடப்பட்டு ஓராண்டு பூர்த்தி நாளான இன்றைய தினம் ”வடக்கு, கிழக்குத் தமிழரின் இணைப்பாட்சி (சமஷ்டி) கோரிக்கையின் தோற்றம்” எனும் கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டலும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு தமிழ் 1505இல் போர்த்துக்கேயர் காலம் தொடங்கி ஒல்லாந்தர்,ஆங்கிலேயர் மற்றும் 1948ஆம் ஆண்டிற்குப் பின்னரான இலங்கை சிங்கள பேரினவாத ஆட்சிக் காலம் வரை பல வகையான துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் உள்ளாக்கப்பட்டு அடக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டு வருகின்றனர்.

வரலாற்று காலம் தொட்டு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு வேண்டிய போராட்டங்கள் மற்றும் சந்திப்புக்களை மேற்கொண்டதுடன் குறிப்பாக அரசியல் தீர்வு தொடர்பான ஒப்பந்தங்களையும் பேச்சுவார்த்ததைகளையும் தமிழ் தலைவர்கள் காலனித்துவக் காலங்களிலும் அதற்கு பின்னராக இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரச தலைவர்களுடனும் மேற்கொண்டிருந்தனர்.

குறிப்பாக பண்டா – செல்வா ஒப்பந்தம், செல்வா – டட்லி ஒப்பந்தம், இலங்கை – இந்திய ஒப்பந்தம், திம்பு பிரகடனம் மற்றும் ஒஸ்லோ பேச்சுவார்த்தை என்பவற்றை இங்கு குறிப்பிட முடியும்.

அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் அனைத்தும் குறிப்பாக சிங்கள தலைவர்களால் நிராகரிக்கப்பட்டு நாம் ஏமாற்றப்பட்ட வரலாறுகளே அதிகம்.

தமிழ் மக்கள் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வரலாற்றுக்கு முந்தைய காலம்தொட்டு பாரம்பரியமாக தமக்கேயான தனித்துவமான அடையாளத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இப்பிராந்தியத்தில் எண்ணிக்கைப் பெரும்பான்மையினரான தமிழ் மக்களுடன் எண்ணிக்கைச் சிறுபான்மையினரான தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.

ஆட்சிக்கு வந்த சிங்கள பெரும்பான்மை அரசுகள் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட முறையில் மேற்கொண்டுவந்த இனவாத அடிப்படையிலான அரசியல், மொழி, பொருளாதார, சமூக ரீதியான அடக்குமுறைகள் மற்றும் வன்முறைகளின் காரணமாகவே வடக்கு, கிழக்கு வாழ் மக்களுக்கு ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்குள் மாகாண முறைமையிலான தீர்வு வழங்கப்பட வேண்டும், தமிழ் மொழியும் அரச கரும மொழியாக அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என 13ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

எனினும், 2006இல் ஒருங்கிணைந்த வடக்கு, கிழக்கு மாகாண அலகு பிரிக்கப்பட்டு வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாக்கப்பட்டன.

குறிப்பாக 1987இல் மேற்கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை உடன்படிக்கை மூலமான 13ஆவது திருத்தச்சட்டம் உருவாக்கப்பட்டு இன்றுடன் 36 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.

இந்தக் கால இடைவெளியில் இலங்கை அரசினால் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதுடன் தமிழர்கள் மீது போர்க்குற்றங்களும் மேற்கொள்ளப்பட்டன. தொடர் இடப்பெயர்வு மற்றும் பலவருடகால அகதி முகாம் வாழ்வை அனுபவித்தனர்.

போரினால் இருப்பிடங்களும், சொத்துக்களும், வாழ்வாதாரங்களும் முற்றாக அழிக்கப்பட்டன. பயங்கரவாதத் தடைச்சட்டதின் மூலம் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர்.

ஆயிரக் கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இராணுவமய மாக்கம், திட்டமிட்ட முறையிலான நில அபகரிப்பு, மனித உரிமை மீறல்கள் காரணமாக பாரிய அச்சுறுத்தலை இன்றுவரை தமிழ் மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

இன அடக்கு முறைகளுக்கும், ஒடுக்கு முறைகளுக்கும் உள்ளாகி இருக்கும் எமது வடக்கு, கிழக்கு மக்கள் தனியான தேசியம், தாயகம் மற்றும் சுயநிர்ணய உரிமையுடன் வாழக் கூடிய வகையிலான “ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு” வேண்டும் எனும் அரசியல் தீர்வு கிடைக்கப் பெறும் பட்சத்திலேயே வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சுயமாகவும் தமக்கான அடையாளத்ததுடன் வாழ முடியும,” என குறிப்பிடப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )