
மீண்டும் 100 கோடி ரூபா சீனி வரி மோசடியில் அரசு
சீனி மீதான வரியை மாற்றியமைத்ததில் பெரும் மோசடி நடந்துள்ளது. 25 சதமாக இருந்த வரி 50 ரூபாவாக ஆக்கப்பட்டுள்ளது.இவ்வாறு வரி அதிகரிப்புக்கு முன்னர் 22,000 மெட்ரிக் தொன் சீனி 25 சத வரியில் சந்தைக்கு விடப்பட்டதன் காரணமாக அரசாங்கத்திற்கு 100 கோடி ரூபா வரி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. 22,000 மெட்ரிக் தொன் சீனி இரகசியமாக வெளியிடப்பட்டதன் காரணமாகவே இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டங்களை தவிர்க்கும் வகையில்’வற்’ அதிகரிப்பு மற்றும் தொழில் வல்லுநர்கள் மீது பாரிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ் 44 ஆவது கட்டமாக மெதிரிகிரிய லங்காபுர மகா வித்தியாலயத்திற்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறுகையில்,
இந்த சீனி மாபியாவில் அங்கம் வகிக்கும் கூட்டாளிகளை பாதுகாக்க அரசாங்கம் செயல்பட்டுள்ளது. இதுபோன்ற மோசடிகளுக்கு இடமளித்திருப்பது எதிர்காலத் தேர்தல்களில் ஆதாயம் அடையவா என்ற சந்தேகம் எழுகிறது.இந்த வரி மோசடியில் அரசாங்கம் நேரடியாக ஈடுபட்டுள்ளது. இது தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட்டு மீண்டும் வரி விதிக்கப்பட வேண்டும்.
இதேவேளை பிரபஞ்சம் நிகழ்ச்சித் திட்டம் எங்கு செயல்படுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் மின்சாரத்தை துண்டிக்கும் சதித் திட்டமொன்று அண்மைய நாட்களாக நடந்து வருகிறது. மாணவ மாணவியர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் வேலைத்திட்டங்களுக்கு இடையூறு செய்து வருவது வருத்தமளிக்கிறது.
ஐக்கிய மக்கள் சக்தியினால் அமுல்படுத்தப்படும் மூச்சுத் திட்டத்தின் கீழ் 56 அரச வைத்தியசாலைகளுக்கு 171,966,900.00 ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பிரபஞ்சம் பஸ் திட்டத்தின் கீழ் 80 அரச பாடசாலைகளுக்கு தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான 80 பாடசாலை பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதோடு 389,200,000.00 ரூபா இதற்காக செலவிடப்பட்டுள்ளது. பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைகள் திட்டத்தின் கீழ் 44 அரச பாடசாலைகளுக்கு 404 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

