
இந்தியாவின் பலத்த எதிர்ப்பையும் மீறி அனுமதி இலங்கைக்குள் வந்தது சீன ஆய்வுக் கப்பல்
இந்தியாவின் பலத்த எதிர்ப்பையும் மீறி சீனாவின் ஆய்வுக் கப்பலான ‘ஷி யான்-6’ நேற்று இலங்கைக்கு வரவிருந்தது. இந்த கப்பல் 17 நாட்கள் முகாமிட்டு இலங்கை கடற் பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனை உறுதி செய்துள்ளார்.
இந்தியாவிற்கு கரிசனையை ஏற்படுத்தியுள்ள கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவிருந்தது.
முன்னதாக இந்த கப்பல் நவம்பர் மாதம் இலங்கை வருவதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருந்தார்.எனினும் சீனா ஒக்டோபரில் இந்த கப்பல் இலங்கை வருவதற்கான அனுமதியை கோரியிருந்தது.
எனினும், பாதுகாப்பு அமைச்சும், வெளிவிவகார அமைச்சும் கப்பலின் வருகைக்கு அண்மையிலேயே அனுமதி வழங்கியிருந்தன.
எவ்வாறாயினும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு அருகில், இந்து சமுத்திரத்தில் ஆய்வு அல்லது கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ‘ஷி யான்-6’ கப்பல் நேற்று காலை கொழும்பு துறைமுகத்தை அண்மித்தது.
இலங்கை வரும் சீனாவின் கடல் ஆராய்ச்சிக் கப்பல் ‘ஷி யான் 6’ கடற் தொழில் அமைச்சின் நாரா நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடும்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்த இலங்கைக்கு சீனா ஏராளமான உதவிகளை செய்திருக்கிறது. இதற்கு பிரதிபலனாக இலங்கை கடற் பரப்பை ஆதிக்கம் செய்து வருகிறது. எனவே அடிக்கடி இலங்கைக்கு உளவுக் கப்பல்களை அனுப்பி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இலங்கைக்கு சீனாவிலிருந்து ஷின் யான் 1, 3, 6, சியாங் யாங் ஹாங் 1, 3, 6, 18, 19, யுவான் வாங்க் 5 ஆகிய உளவு மற்றும் போர்க் கப்பல்கள் வந்துள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஹய் யாங் 24 ஹவோ என்ற சீன போர்க் கப்பல் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி கொழும்பு துறைமுகத்தில் 2 நாட்கள் தங்கியிருந்தது.
தங்களுடைய கப்பல்களை ஆய்வுக் கப்பல்கள் என்று சீனா கூறிக்கொண்டாலும், அது உளவு பார்க்கவே அனுப்பப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களில் நிலை நிறுத்தப்படும் இந்த கப்பல்களால் சாதாரணமாக 750 கி.மீ தூரம் வரை உளவு பார்க்க முடியும். இலங்கையிலிருந்து 750 கி.மீ தொலைவு எனில் இந்தியாவின் தெற்கே ஸ்ரீஹரிகோட்டா ரொக்கெட் ஏவுதளம், கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் இந்தியாவின் தென் மாநிலங்களில் அமைந்திருக்கும் 6 கடற்படைத் தளங்கள், தமிழ்நாட்டின் துறைமுகங்கள் ஆகியவை இதற்குள் அடங்கிவிடும். எனவே இது குறித்த தகவல்களை சீனா ரகசியமாக சேகரிக்க வாய்ப்பிருக்கிறது என் இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
எனவே சீனாவின் இந்த நடவடிக்கையை தடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் இந்த எதிர்ப்பையும் மீறி இலங்கை அரசு சீனாவின் உளவு கப்பலுக்கு அனுமதியளித்திருக்கிறது. இதற்கு காரணம் சீனா, இலங்கைக்கு செய்த பொருளாதார உதவிதான். இந்தியாவும் இலங்கைக்கு ஏராளமான உதவிகளை செய்திருக்கிறது. ஆனால், இந்தியாவின் உறவை விட, சீனாவின் உறவையே இலங்கை அதிகம் எதிர்பார்க்கிறது. இனி வரும் காலங்களிலாவது மத்திய அரசு இலங்கையிடம் இது குறித்து வலியுறுத்த வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றன.