மட்டு மேச்சல் தரைக்கு திடீரென வந்த  புத்தர் சிலையை இராணுவ முகாமுக்குள் வைத்து விட்டு இனமுரண்பாட்டை தூண்ட முயற்சி

மட்டு மேச்சல் தரைக்கு திடீரென வந்த புத்தர் சிலையை இராணுவ முகாமுக்குள் வைத்து விட்டு இனமுரண்பாட்டை தூண்ட முயற்சி

மட்டக்களப்பு மயிலத்தமடு மேய்ச்சல் தரையில் முதல் நாள் வைக்கப்பட்டு மறுநாள் இரவோடு இரவாக காணாமல்போன புத்தர் சிலையை அரனகந்த இராணுவ முகாமிலுள்ள விகாரையில் இராணுவத்துடன் அம்பிட்டிய சுமணரட்ண தேரர் கொண்டுசென்று வைத்துவிட்டு சிலை காணாமல் போயுள்ளதாக பண்ணையாளர்கள் மீது குற்றம் சுமத்தி இனமுரண்பாட்டை ஏற்படுத்த தேரர் முயற்சித்து வருகின்றார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

புத்தர் சிலை காணாமல் போயுள்ளது தொடர்பாக பண்ணையாளர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மயிலத்தமடு மாதவனை பிரதேச மேய்ச்சல் தரை பிரதேசத்திலுள்ள வேரகொடல்ல பகுதியில் சட்டவிரோதமாக சிங்களவர்கள் குடியேறி அங்கு விகாரை ஒன்றை அமைத்திருந்த நிலையில் 2015 ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய அங்கிருந்து சட்டவிரோத குறியேற்றவாசிகளை வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து அந்த பகுதியைத் தொடர்ந்து அம்பாறை, பொலனறுவை மாவட்ட சிங்கள மக்கள் அத்துமீறி தமிழர்களுக்கு சொந்தமான கால் நடை மேய்ச்சல் தரையில் குடியேறி வந்ததுடன் கால்நடை பண்ணையாளர்களின் மாடுகளை சுட்டுக் கொலை செய்வதும் வாடிகளை எரிப்பதும் மாடுமேய்ப்பவர்களை பிடித்து கட்டிவைப்பது போன்ற பல்வேறு செயற்பாட்டில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த அநீதிகளுக்கு எதிராகவும் சிங்கள சட்டவிரோத குடியேற்றவாசிகளை வெளியேறுமாறு கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்கள் கோரி கடந்த 38வது நாளாக சித்தாண்டி பிரதேசத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் அத்துமீறிய குடியேற்றவாசிகளை வெளியேற்றுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டதாக ஊடகங்கள் வாயிலாக அறியக்கூடியதாக இருந்தது.

இந்த உத்தரவு பிறப்பித்ததையடுத்து முன்னாள் கிழக்கு ஆளுநர் அனுராதா ஜகம்பத் ,மட்டக்களப்பு விகாரை விகராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரர் தலைமையில் மீண்டும் ஒரு புத்தர் சிலையை மேய்ச்சல் தரைப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டு சென்று வைத்த நிலையில் கடந்த புதன்கிழமை அந்தச் சிலை காணாமல் போயுள்ளதாகவும் அதனை பண்ணையாளர்கள் தூக்கிச் சென்றதாக குற்றம் சுமத்தி சுமணரட்ன தேரர் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த தேரர் கடந்த காலத்தில் கண்டி திகனவில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான இன கலவரத்துக்கு மூல காரணமானவர். இவர் தற்போது இங்கு இனகலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக குறித்த சிலையை வைத்துவிட்டு அதனை மீண்டும் இராணுவத்துடன் அங்கிருந்து இரவோடு இரவாக எடுத்துச் சென்று அரனகந்த இராணுவமுகாமில் உள்ள விகாரையில் வைத்துவிட்டு,அது காணாமல் போயுள்ளதாகவும் அதனை தமிழ் பண்ணையாளர்கள் எடுத்துச் சென்றுள்ளதாகவும் சிங்கள மக்களிடம் நாடக மாடிவருவதுடன் இதனை சாட்டாக வைத்து இனமுரண்பாட்டை ஏற்படுத்தவும் தேரர் முயற்சித்து வருகின்றார்

எனவே இந்த தேரரின் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதுடன் கிழக்கில் தமிழர் பகுதிகளில் உள்ள ஆலய பகுதிகளை தங்களது பௌத்த விகாரை என பொய்யான கதைகளை கூறிக் கொண்டு மட்டக்களப்பு மாவட்ட அம்பாறை எல்லை பகுதியான மங்களகம பகுதியில் காடுகளை அழித்து நிலங்களை ஆக்கிரமித்து விகாரை அமைத்து கொண்டு பல்வேறு அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகின்றார் எனவும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )