
400 ரூபா மருந்து 4000 ரூபாவுக்கு !
அவசரகால கொள்முதல் நடவடிக்கையின் கீழ் மருந்துகளை கொள்வனவு செய்யும் சுகாதார அமைச்சின் நடைமுறையின் மூலம் 400 ரூபா பெறுமதியான சில மருந்துகள் 4000 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக மருந்து பொருட்கள் மற்றும் கொள்வனவு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உபகுழு விசாரணையில் தெரியவந்துள்ளது.
2019 மற்றும் 2022 க்கு இடையில், 286 அவசரகால கொள்முதல் நடந்துள்ளதாகவும் அவை அனைத்தும் ஊழல் பரிவர்த்தனைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் தொற்று பரவல் காலப்பகுதிக்குப் பின்னர் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் 400 ரூபா பெறுமதியான மருந்துகள், அவசரகால கொள்வனவுகளின் கீழ் பல்வேறு விலைகளில் அவ்வப்போது 1,950 ரூபா தொடக்கம் 4,000 ரூபா வரையிலான விலைகளில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிற்காலத்தில் நிராகரிக்கப்பட்ட திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, அந்த திட்டங்களுக்கு பல மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டும், இலாபம் எதுவும் கிடைக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
சுகாதார அமைச்சு வருடாந்தம் ஏறக்குறைய 10,000 விலைமனு கோரலை கொண்டிருப்பதாகவும், இவற்றில் பெரும்பாலான பரிவர்த்தனைகள் ஊழல் நிறைந்தவை என்றும் பாராளுமன்ற உபகுழு விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக தயாரிக்கப்பட்ட முழுமையான அறிக்கை இந்த உபகுழுவை நியமித்த பாராளுமன்ற நிதிக்குழுவிடம் வழங்கப்பட உள்ளது.