பஸ் மீது வேரோடு சரிந்த பாரிய மரம் -5 பேர் உயிரிழப்பு ; 17 பேர் படு காயம் ; கொள்ளுப்பிட்டியில் பெரும் அனர்த்தம்

பஸ் மீது வேரோடு சரிந்த பாரிய மரம் -5 பேர் உயிரிழப்பு ; 17 பேர் படு காயம் ; கொள்ளுப்பிட்டியில் பெரும் அனர்த்தம்

கொள்ளுப்பிட்டி – டுப்ளிகேஷன் வீதியில் வெள்ளிக்கிழமை காலை  40 வருட கால பழமை வாய்ந்த பாரிய மரமொன்று வேரோடு சரிந்து  பயணிகள் பஸ் மீது வீழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்ததுடன் 17 பேர் படு காயமடைந்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டி, டுப்ளிகேஷன் வீதியில் லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் காலை, தெனியாய நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மீதே வீதி ஓரத்திலிருந்த இந்த பாரிய மரம் வேரோடு சரிந்து  வீழ்ந்ததில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதில்  பாடசாலை மாணவர்களும் உள்ளடக்கம்.

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் துரித கதியில் இடம்பெற்றதோடு பலர் காப்பாற்றப்பட்டனர்.  அதேசமயம் மூவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் .

விபத்தில் காயமடைந்த 12 பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதேசமயம் பலர் தங்களது உறவுகளைத் தேடி கண்ணீருடன் வைத்தியசாலையில் காத்திருக்கும் காட்சிகள் மனதை உருக்குவதாய்  அமைந்திருக்கின்றன. 

காலையில் தொழிலுக்குச்  சென்றவர்கள்,  பாடசாலைக்குச் சென்றவர்கள் என பலர் இந்த  கோர விபத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்.

இதேவேளை இந்த  விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபா வீதம் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

கொள்ளுப்பிட்டி – டுப்ளிகேஷன் வீதியில் 100 வருடங்கள் பழமை வாய்ந்த ரொபரோஸியா வகையான மரம் ஒன்றே பேருந்தில் முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ரானி ஜயவர்தன இதனைத் தெரிவித்தார். எனினும், இந்த மரத்தை அகற்ற வேண்டும் என எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்

இந்த மரங்கள் மேலும் சில பகுதிகளில் உள்ளன, இந்த  மரங்களின் தன்மை தொடர்பில், ஆராய்ந்து அதனை அகற்றுவது தொடர்பில், எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )