
ரணிலுக்கு என்ன நடந்தது?; முற்றாகவே மாறி விட்டார்
ஜனநாயகம், மனித உரிமைகள் தொடர்பில் கதைத்த ரணில் விக்கிரமசிங்க, தற்போது முழுமையாக மாறிவிட்டார் என்றும் ஏன் இப்படி மாறினார் என்பதனை புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் துஷார இதுநில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் ஆகியன மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
முல்லைதீவு நீதிபதி பதவி விலகி வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். சரத் வீரசேகர எனும் அரசியல்வாதி நீதிபதி கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் போது அந்த இடத்திற்கு சென்று எதிர்ப்பு வெளியிட்டால் எப்படி நீதித்துறை பாதுகாக்கப்படுகின்றது என்பதனை உறுதிப்படுத்த முடியும். அவர் அவ்வாறு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்தால் நீதிமன்றத்தை அவமதித்த குற்றசாட்டில் சரத் வீரசேகர கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்காது நீதிபதி பதவி விலகியுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி ஜேர்மனிக்கு சென்றிருந்த போது அங்குள்ள ஊடகமொன்று நேர்காணலொன்றை வழங்கியுள்ளார். இது ரணில் விக்கிரமசிங்கவா என்று எண்ணத் தோன்றுகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணையை கோரும் போது இதற்கு வெளிநாட்டவர்கள் அவசியமில்லை. எமது நாட்டுக்குள்ளேயே விசாரணையை செய்வோம் என்கின்றார்.
அத்துடன் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும் கூறுகின்றார். இது எங்களுக்கு அதிசயமாக உள்ளது. போத்தல ஜயந்தவுக்கு தாக்குதல் நடத்தும் போதும், லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்யும் போது அதனை கண்டித்த ரணில் விக்கிரமசிங்கவா இது? இவருக்கு இப்போது எங்கிருந்து இவ்வாறான சிந்தனை வந்தது என்று தெரியவில்லை. ஜனநாயகம் தொடர்பில் கதைத்த, நல்லாட்சி தொடர்பில் கதைத்த, மனித உரிமைகள் தொடர்பில் கதைத்த, உலக ஜனநாயக அமைப்பின் தலைவராக இருந்தவருக்கு இப்போது என்ன நடந்தது. திருடரிடம் வளரும் கிளி போன்று மாறியுள்ளார். எங்களிடம் இருந்தவர், ராஜபக்ஷ தரப்பிடம் சென்ற பின்னர் அந்த கிளியை போன்று மாறியுள்ளார்.
இதனால் ராஜபக்ஷக்களுக்கும் மேலாக ராஜபக்ஷ கொள்கைகளை பாதுகாப்பவராக ரணில் விக்கிரமசிங்க மாறிவிட்டார். ரணில் விக்கிரமசிங்கவை ரணில் ராஜபக்ஷ என்று மக்கள் கூறுவதும் நியாமாகியுள்ளது. இதனால் தனது கோட்டுக்கு மேலே சால்வையொன்றை போட்டுக்கொள்ளுமாறு அவருக்கு நாங்கள் கோரிக்கை விடுகின்றோம் என்றார்.