
நாட்டில் பணமில்லை சுற்றுலா செல்லும் ரணில்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டில் பொருளாதார ஸ்தீர நிலையை ஏற்படுத்துவதாக கூறிக்கொண்டு டொலரை வீணடித்து சுற்றுலா செல்வது போன்று பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்துக்கொண்டு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்கின்றார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் நேற்று புதன்கிழமை கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி ஐ.நா. சபையில் உரையாற்றியும் உலகத் தலைவர்கள் முன்னிலையிலும் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதாக உறுதியளித்துள்ளார். இதற்காக பெருமளவு பங்களிப்பு செய்வதாக அவர் குறிப்பிடுகின்றார். அவ்வாறு அவர் ஒருபக்கத்தில் கூறிக்கொண்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறி செயற்படுகின்றார். ஊடக ஒளிபரப்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவை அமைக்க முயற்சிக்கப்படுகின்றது. அடுத்ததாக நிகழ்நிலை காப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஆகியவற்றை கொண்டு வர முயற்சிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அரசியலமைப்பு ரீதியில் அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி தேர்தலை நடத்தாதிருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதேபோன்று பாராளுமன்ற சிறப்புரிமையை கொண்டு நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கப்படுகின்றது.
நாட்டை ஸ்திரநிலைக்கு கொண்டு வருவதாக ஒருபக்கத்தில் பேசிக்கொண்டு மறு பக்கத்தில் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறுகின்றனர். இதற்காக பாராளுமன்றத்திற்கு சட்டமூலங்களை கொண்டு வருகின்றனர்.
அன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருக்கும் போதிருந்த ரணில் அல்ல இவர். ராஜபக்ஷக்களுடன் இருந்துகொண்டு அவர்கள் கூறுவதை கேட்டுக்கொண்டு அவர்களின் கருத்துக்களுக்கு அமைய செயற்படும் ரணில் விக்கிரமசிங்கவே இருக்கின்றார்.
எங்களை தியாகங்களை செய்யுமாறு கூறிக்கொண்டு பொருட்களின் விலைகள், கட்டணங்களை அதிகரித்துள்ளனர். இவ்வாறு சில காலத்திற்கு செல்ல நேரிடும் என்று கூறுகின்றனர். இதேவேளை நாட்டில் டொலர் இல்லை, அதனை தேட வேண்டும் என்றும் கூறுகின்றனர். இவ்வாறு இருக்கையில் ஐநாவுக்கு போகும் போது 7,8 பாராளுமன்ற உறுப்பினர்களையும் கூட்டிச் செல்கின்றார். அவர்களை முன்னால் வைத்துக்கொண்டு ஜனாதிபதி அங்கே உரையாற்றுகின்றார். அவர்களை அங்கே அழைத்துக்கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. ஜனாதிபதி செயலகத்தில் அவர்களை அழைத்து அமரச் செய்து உரையாற்றியிருக்க முடியும். இதன் மூலம் எமது டொலராவது மிச்சமாகும். இதன்மூலம் நாட்டுக்கு கிடைத்த நன்மை என்ன? அதுவொரு சுற்றுலாப் பயணம் மட்டும்தான். எங்களை தியாகங்களை செய்யுமாறு கூறிக்கொண்டு ஜனாதிபதி சுற்றுலா செல்வதை போன்று பலரை கூட்டிக்கொண்டு போகின்றார்.

