என்னை வீழ்த்த பலரும் முயற்சி

என்னை வீழ்த்த பலரும் முயற்சி

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களினால் மறுக்கப்பட்ட தமிழர்களுக்கான உரிமைகளை நான் தமிழர்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளதால் அடிப்படைவாத கொள்கையுடைய முஸ்லிம் அமைப்புக்கள் என்மீது வெறுப்புக் கொண்டுள்ளன.அதனால் என்னை வீழ்த்த உயிர்த்த ஞாயிறு தொடர்பான சனல் 4 காணொளியை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகின்றார்கள் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் ( பிள்ளையான் )தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம்,தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி நளின் பண்டார என்னை கடுமையாக நாகரீகமற்ற வகையில் விமர்சித்துள்ளார்.என்னை ‘கொலையாளி’ என்று விமர்சித்துள்ளார்.ஆகவே அந்த வார்த்தையை பாராளுமன்ற ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு வேண்டுகின்றேன்.

எனது ஊடக செயலாளராக இருந்த அன்ஷிப் அசாத் மௌலான புகலிடக் கோரிக்கைக்காக என் மீது பாரிய பழியை சுமத்தியுயள்ளார்.ஒருவகையில் இந்த மௌலானா வெற்றி பெற்றுள்ளார் .ஏனெனில் அவர் பிரபல்யமடைந்துள்ளார்.அவரது புகலிடக் கோரிக்கையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து நான் விலகியதன் பின்னர் புலிகள் அமைப்பு பலவீனமடைந்து தோல்வியடைந்தது என்று என்மீது வெறுப்புக் கொண்டுள்ள நாடுகடந்த தமிழர் அமைப்புக்கள் அசாத் மௌலானாவின் பின்னணியில் உள்ளன.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களினால் மறுக்கப்பட்ட தமிழர்களுக்கான உரிமைகளை நான் தமிழர்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளதால் அடிப்படைவாத கொள்கையுடைய முஸ்லிம் அமைப்புக்கள் என்மீது வெறுப்புக் கொண்டுள்ளன.மறுபுறம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் தலைமைகளும் என்னை வீழ்த்த இந்த விடயத்தை ஒரு ஆயுதமாக கொள்கிறார்கள்.

குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு 2020.10.08 ஆம் திகதி முன்னிலையான போது சிறைச்சாலையில் இருந்த போது சந்தித்தவர்களையும்,பேசப்பட்ட விடயங்களையும் குறிப்பிட்டுள்ளேன்.நான் சாட்சியமளிக்க செல்லும் போது அசாத் மௌலானாவும் என்னுடன் வருகை தந்திருந்தார்.

கிழக்கு மாகாணத்தை அடிப்படையாக கொண்டு சஹ்ரான் உட்பட அவரது தரப்பினர் செயற்பட்டுள்ளார்கள். பயங்கரவாதி சஹ்ரான் பல பகுதிகளில் பயிற்சி கூடங்களை நடத்தியுள்ளார்.பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா ஒன்றும் அறியாதவர் போல் தற்போது கருத்து தெரிவிகின்றார்.

முஸ்லிம் அரசியல்வாதிகள் கலீமா என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் பேசுகிறார்கள்.எதிர்காலத்திலும் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறாமல் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டு மக்கள் பிரதிநிதிகள் செயற்பட வேண்டும்.

அடிப்படைவாத கொள்கையினை உடையவர்கள் நாட்டில் உள்ளார்கள். தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும்.பிரதேச பொலிஸ் சேவைகள் பலப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் விசாரணைகளுக்கு தயார் என்பதை நான் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.என் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால் தூக்கு மேடைக்கும் செல்ல தயார். முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதற்காக எதிர்க்கட்சித் தலைவரும்,ஜே .வி.பி.யினரும் என்னை விமர்சிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.நான் தவறு செய்யவில்லை.எனது கையில் இரத்த கறையில்லை எனவே எனது அரசியல் பயணம் தொடரும் அதனை யாரும் தடுக்க முடியாது என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )