ஐ.எஸ்.ஐ.எஸ். மீது சுமத்தப்பட்ட பழி; பிள்ளையானுக்கு எதிராக எந்த விசாரணையும் இல்லை

ஐ.எஸ்.ஐ.எஸ். மீது சுமத்தப்பட்ட பழி; பிள்ளையானுக்கு எதிராக எந்த விசாரணையும் இல்லை

‘சொனிக்’ என்ற புலனாய்வு அதிகாரிதான் பொடி சஹ்ரானை சந்தித்து உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியதாக அறிவித்ததாக கூறுமாறு வலியுறுத்தியுள்ளார்.உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பு உரிமை கோரவில்லை.மலேசியாவில் உள்ள அமைப்பு ஒன்று தான் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பு உரிமை கோரியதாக அறிவித்தது எனத்தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான நளின் பண்டார ,இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)மீது பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக இதுவரை எந்தவிதமான விசாரணைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் எவ்வாறு இந்த அரசிடமிருந்து நியாயத்தை எதிர்பார்க்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான முதல் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் பேசுகையில்,

தலதா மாளிகைக்கு குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர்,600 பொலிஸாரை கொன்று குவித்தவர்,திரிபோலி குழுவின் தலைவராக பதவி வகிப்பவர் இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கும் போது உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதென்பது சந்தேகத்துக்குரியது.

குண்டுத் தாக்குதல் சம்பவத்தை தொடர்புப்படுத்தி ‘சொனிக்,சொனிக் ‘ என்ற வார்த்தை குறிப்பிடப்படுகிறது.புலனாய்வு அதிகாரி ஒருவரையே சொனிக் என்று குறிப்பிட்டதாக கூறப்படுகின்றது. .இந்த சொனிக் என்ற அதிகாரிதான், பொடி சஹ்ரானை சந்தித்து உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியதாக அறிவித்ததாக குறிப்பிடுமாறு வலியுறுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தை ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பு உரிமை கோரவில்லை.மலேசியாவில் உள்ள அமைப்பு ஒன்று தான் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பு உரிமை கோரியதாக அறிவித்தது.ஆகவே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பாரிய சூழ்ச்சி உள்ளது.

2019 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் அனைத்தும் முடக்கப்பட்டன.ராஜபக்ஸக்களின் முகவர்கள் அனைத்து துறைகளிலும் உள்ளார்கள்.அவர்களை வைத்துக் கொண்டு முறையான விசாரணைகளை முன்னெடுக்க முடியாது.

குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு,பாராளுமன்ற தெரிவுக்குழு சமர்ப்பித்த அறிக்கைகளை அடிப்படையாக கொண்டு எவருக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யவில்லை.

திரிபோலி குழு தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.ஆனால் அந்த குழுவின் தலைவருக்கு தற்போது இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. கோத்தபாய ராஜபக்ஸ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவுடன் சிவநேசதுரை சந்திரகாந்தன் விடுதலை செய்யப்பட்டார்.கோத்தபாய ராஜபக்ஸவுக்கு ஆதரவாக செயற்பட்ட சுரேஷ் சாலே புலனாய்வு பிரிவின் பிரதானியாக நியமிக்கப்பட்டார்.எனவே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக அரசு உண்மையை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )