உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்; மைத்திரிபால குற்றவாளிதான்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்; மைத்திரிபால குற்றவாளிதான்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதான குற்றச்சாட்டு நீக்கிக்கொள்ளப்படாது.அது அவ்வாறே தொடரும் என்று இலங்கை கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு தொடர்பான நகர்த்தல் பத்திரம் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆராயப்பட்ட போது, நீதிமன்றத்திற்கு சென்றிருந்த கத்தோலிக்க திருச்சபையின் ஊடக பணிப்பாளர் ஆயர் ஜுட் நிஷாந்த, அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் இதனை கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் போதுமான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதும், அந்த தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான தீர்மானம் கடந்த ஜனவரி 12 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. அதன்போது தாக்குதலை தடுக்க தவறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பிரதிவாதிகள் தரப்பினர் மனுதாரர்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக தெரிவித்து தீர்ப்பளித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நஷ்ட ஈட்டை வழங்குமாறு அறிவித்திருந்தது.

அதற்காக வழங்கப்பட்டிருந்த 6 மாத கால அவகசம் கடந்த ஜூன் 12 ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது. இதன்போது பிரதிவாதிகள் தரப்பால் முழு நஷ்ட ஈட்டு தொகையில் ஒரு பகுதி மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.இதனால் மனுதாரர்கள் நகர்த்தல் பத்திரத்தை தாக்கல் செய்திருந்தனர். குறித்த நகர்த்தல் பத்திரம் வெள்ளிக்கிழமை நீதயரசர்கள் குழாம் முன்னிலையில் ஆராயப்பட்டது. இதன்போது அவற்றை மீண்டும் நவம்பர் 2 ஆம் திகதி ஆராய்வதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்திற்கு சென்றிருந்த இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் ஊடக பணிப்பாளர் ஆயர் ஜுட் நிஷாந்த ஊடகங்களுக்கு கூறுகையில்,

தாக்குதல் காலத்தில் ஜனாதிபதியாக இருந்தவர் ஐந்து வருடங்களின் பின்னர் சர்வதேச விசாரணை வேண்டும் என்று கூறுகின்றார். அவர் ஜனாதிபதி பதவியில் இருக்கும் போதே இந்த விசாரணைக்கு கூறியிருக்கலாம்தானே?. ஏன் அதனை செய்யவில்லை? அவர் இப்போது தான் நிரபராதி என்பது உறுதியாவதாக கூறுகின்றார். எவ்வாறாயினும் தாக்குதல் தொடர்பில் 3 குழுக்கள் உள்ளன. சஹ்ரான் போன்ற குண்டுகளை வெடிக்க வைத்த குழுக்கள். அடுத்தாக இந்த தாக்குதல் மூலம் நண்மையடைவதற்காக இதனை வழிநடத்திய குழு. மூன்றாவதாக தாக்குதல் தொடர்பில் அறிந்தும் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காத குழுக்கள். இந்த குழுவிலேயே மைத்திரிபால சிறிசேன அடங்குவார். இதனால் அவருக்கு எதிரான குற்றச்சாட்டை நாங்கள் நீக்கிக்கொள்ளவில்லை. அந்த குற்றச்சாட்டு அவ்வாறே உள்ளது என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )