
சரத் வீரசேகரவை உடனடியாக கைதுசெய்யுமாறு வலியுறுத்தி வடக்கில் சட்டத்தரணிகள் போராட்டம்
நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையீடு செய்து நீதிபதிக்கு அச்சறுத்தல் விடுத்ததாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவை உடனடியாக கைதுசெய்யுமாறு வலியுறுத்தி வடமாகாணத்தின் பல பகுதிகளில் இன்று சட்டத்தரணிகளால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
முல்லைதீவு நீதிபதி தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கடந்த 22ம் திகதி அவதூறு பரப்பும் வகையிலும் நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்கு உட்படுத்தும் வகையிலும் பாராளுமன்றில் சில கருத்துகளை பதிவுசெய்துள்ளதாக அவர்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சரத் வீரசேகரவின் கருத்துக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அவரது உரைக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் வடமாகாணத்தில் பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா யாழ்.நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
நீதித்துறையின் சுதந்திரத்திக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சரத் வீரசேகரவையும், இனக்கலவரத்திற்கு ஏதுவாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் வீட்டை முற்றுகையிட முனையும் பிரிவினைவாதிகளையும் உடனடியாக கைதுசெய்யுமாறும் வலியுறுத்திய கோஷங்கள் அடங்கிய பதாதைகளை காட்சிபடுத்தியே அவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து யாழ்ப்பாண மாவட்டத்தில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
போராட்டம் காரணமாக யாழ்ப்பாணத்தில் நீதிமன்ற செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தன.
யாழ்ப்பாண நீதிமன்றம் முன்பாக ஒன்று கூடிய சட்டத்தரணிகள் அமைதியாகவும் கறுப்பு பட்டிகளை தலையில் அணிந்தவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, சரத் வீரசேகரவின் கருத்தை கண்டித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் இன்றைய தினம் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
அத்துடன், சாவகச்சேரி நீதிமன்றம் முன்பாகவும் சட்டத்தரணிகள் போராட்டமொன்றை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது


