தமிழ் மக்கள் விரும்பும் தீர்வுக்கு 13 வழிவகுக்கும்; தமிழ் கட்சி தலைவர்களிடம் அமெரிக்க தூதுவர்

தமிழ் மக்கள் விரும்பும் தீர்வுக்கு 13 வழிவகுக்கும்; தமிழ் கட்சி தலைவர்களிடம் அமெரிக்க தூதுவர்

13வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு தமிழ் கட்சிகள் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் புத்திசாலித்தனமானதென அமெரிக்க தூதுவர் இதனை அடிப்படையாக கொண்டு தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை பெற்றுக் கொள்ள முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க தூதுவர் நேற்று புதன்கிழமை தமிழ் கட்சி தலைவர்களைச் சந்தித்து பேசினார்.சுமார் 1-1/2 மணிநேரம் நடைபெற்ற இச்சந்திப்பில் தமிழரசு கட்சியின் சி.வி.கே. சிவஞானம்,புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

இச்சந்திப்பின் போது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நீண்ட நாட்களின் பின் வடக்குக்கு வந்ததாகவும் இங்குள்ள கள நிலைமைகளை ஆராய வந்ததாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் தமிழ் கட்சித் தலைவர் தமிழ் மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து தமிழ் கட்சியினர் எடுத்துரைத்தனர்.

வடகிழக்கில் தீவிரமடைந்து வரும் நில ஆக்கிரமிப்பு, அண்மைக்காலமாக இந்து ஆலயங்களில் ஏற்படுத்தப்படும் மோசமான பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக தெளிவுபடுத்தினர்.பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்ட குருந்தூர்மலை உள்ளிட்ட ஆலயப் பகுதிகளில் பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள் இல்லாத நிலையில் தேவையற்ற வகையில் பிரச்சினைகள் ஏற்படுத்தப்படுகின்றது. இதற்கு காரணம் அந்தப் பகுதிகளை ஆக்கிரமிப்பதற்கேயாகும்.ஜனாதிபதி தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பை தடுக்க முற்பட்டாலும் அதனை அத்திணைக்கள அதிகாரிகள் அதனை கவனத்தில் எடுக்காத நிலைமையுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படவில்லை.அதேநேரம் இச்சட்டத்தை நீக்கி புதிதாக கொண்டு வருவதற்கு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டு வரும் நடவடிக்கையை அரசாங்கம் கைவிட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினர்.

பொருளாதார நெருக்கடியினால் டாக்டர்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர்.பொருட்களின் விலைகள் அதிகரிப்பு போன்றவற்றால் மக்கள் கஷ்டப்படுகின்றனர்.

13வது திருத்தத்தை அமுல்படுத்துவது மற்றும் மாகாண சபை தேர்தல் என்பன தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமில்லை.ஜனாதிபதி தனது வாக்கு வங்கியை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னே இதனை நடைமுறைப்படுத்தும் நிலைமையுள்ளது.புதிய அரசியலமைப்புக்கும் அதன் மூலமான அரசியல் தீர்வுக்கும் சாத்தியமில்லை எனவும் தமிழ் கட்சி தலைவர்கள் ஜூலி சங்கிடம் தெரிவித்தனர்.

இந்நிலையில் ,அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கூறுகையில், 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு தமிழ் கட்சிகள் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் புத்திசாலித்தனமானது. இதனை அடிப்படையாக கொண்டு தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை நோக்கிச் செல்வதற்கும் வழிவகுக்கும் என்றார்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )