முல்லைத்தீவு நீதிபதி ஒரு மனநோயாளி வேறொரு நீதிபதியை உடன் நியமிக்கவும்

முல்லைத்தீவு நீதிபதி ஒரு மனநோயாளி வேறொரு நீதிபதியை உடன் நியமிக்கவும்

குருந்தூர் மலையில் கை வைப்பதை அடிப்படைவாதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு.தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஒரு மனநோயாளி .இவர் பௌத்தர்களுக்கு இடமளிக்கமாட்டார் ஆனால் பொங்கல் பொங்குவதற்கு இடமளிப்பார்.மனநோயாளியான நீதிபதியினால் சரியான தீர்மானத்தை எடுக்க முடியாது. ஆகவே முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு பிறிதொரு நீதிபதி ஒருவரை நியமிக்குமாறு நீதிமைச்சரிடமும்,நீதிச் சேவை ஆணைக்குழுவிடமும் வலியுறுத்துகிறேன் என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு தலைவரும் அரச தரப்பு எம்.பி.யுமான சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

தொல்பொருள் கட்டளைச்சட்டத்துக்கு எதிராகவே முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி குருந்தூர் மலையில் பொங்கல் பொங்கும் இந்து மத வழிபாட்டில் ஈடுபட அனுமதி வழங்கியுள்ளார். தொல்பொருள் கட்டளைசட்டத்தில் ‘பௌத்தர்களின் மனங்களை பாதிக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்க கூடாது,அவ்வாறான செயற்பாடுகள் தண்டனைக்குரிய குற்றம் ‘என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான தெளிவான கட்டளைச் சட்டங்கள் காணப்படுகின்றன நிலையில் நீதிபதி தவறான கட்டளைகளை பிறப்பித்துள்ளமை பாரிய பிரச்சினைக்குரியது.

குருந்தூர் மலைக்கு கடந்த 18 ஆம் திகதி தமிழ் அரசியல்வாதிகளுடன் வருகை தந்த குண்டர்கள் அப்பகுதியில் இருந்த குருந்தூர் மலையின் விகாராதிபதி சாந்த போதி தேரரை தகாத வார்த்தைகளால் தூற்றி,வெளியேற்றினர்.இவ்வாறான செயற்பாடுகளினால் பௌத்தர்களின் மனம் பாதிக்கப்படாதா ?

நாங்கள் பொறுமையாக இருக்கிறோம்,அந்தப் பொறுமையை கோழைத்தனம் என்று கருதக் கூடாது

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஒரு மனநோயாளி என்றே கூறப்படுகின்றது. நீதிபதியின் மனைவியே,இந்த நீதிபதி ஒரு மனநோயாளி ஆகவே அவரை தான் மனநோய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாக முல்லைத்தீவு பொலிஸாருக்கு குறிப்பிட்டுள்ளார். மனநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவர் எவ்வாறு நீதிபதியாக செயற்பட முடியும்?. அவர் பௌத்தர்களுக்கு இடமளிக்கமாட்டார். ஆனால் பொங்கல் பொங்குவதற்கு இடமளிப்பார்.மனநோயாளியான நீதிபதியினால் சரியான தீர்மானத்தை எடுக்க முடியாது.ஆகவே முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு பிறிதொரு நீதிபதி ஒருவரை நியமிக்குமாறு நீதிமைச்சரிடமும்,நீதிச் சேவை ஆணைக்குழுவிடமும் வலியுறுத்துகிறேன்.

இனவாத கொள்கையற்ற தமிழ் நீதிபதிகள் பலர் நாட்டில் உள்ளார்கள். ஆகவே அவர்களை முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க வேண்டும்.யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தின் நீதிபதி இளஞ்செழியனின் உயிரை சிங்கள பௌத்த பொலிஸான சரத் ஹேமச்சந்திர தனது உயிரை கொடுத்து பாதுகாத்தார்.நீதிபதி இளஞ்செழியன் அந்த பொலிஸாரின் பிள்ளைகளின் கல்வி செலவுகளை முழுமையாக பொறுப்பேற்று அவர்களுக்கு இன்றும் உதவி செய்து வருகின்றார்.

எம்மத்தியில் இனவாதம்,மதவாதம் கிடையாது.இல்லாத முரண்பாடுகளை தோற்றுவிக்க வேண்டாம் என்பதை தமிழ் அரசியல்வாதிகளிடம் கேட்டுக் கொள்கிறேன்.முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் விடுதலைப் புலிகளை போசித்தார்.இறுதியில் புலிகளே அவரை படுகொலை செய்தார்கள்.அமிர்தலிங்கத்தின் மனைவி மற்றும் இரு பிள்ளைகளை சிங்கள பௌத்த பாதுகாவலர்களே பாதுகாத்தார்கள்.

சிங்கள இனத்துக்கு எதிராக செயற்படுபவர்களை கடுமையாக விமர்சிப்பவர்களை சிங்கள பௌத்தர்களே பாதுகாத்துள்ளார்கள். இவ்வாறான இனம் உலகில் எங்கும் இருக்காது. சிங்களவர்களுக்கும், பௌத்த மரபுரிமைகளுக்கும் எதிராக செயற்படும் தமிழ் அரசியல்வாதிகளின் பாதுகாப்புக்கு சிங்கள பௌத்தர்களே உள்ளார்கள்.

குருந்தூர் மலையில் கை வைப்பதை அடிப்படைவாதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு.தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.தொல்பொருள் விவகாரம் நாட்டின் தற்போதைய பிரதான தேசிய பிரச்சினையாக உள்ளது.தொல்பொருள் எமது உரிமை.அத்துடன் தொல்பொருள் எமது தேசிய அடையாளம்.அந்த வகையான தேசிய அடையாளத்தை அழிக்க முயற்சிப்பது தேசத் துரோகம்..தூர நோக்கமற்ற வகையில் பிறப்பிக்கப்படும் கட்டளைகளினால் இனவாத முரண்பாடுகள் தோற்றம் பெறும்.அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் அதற்கு பொறுப்பான நீதிபதி,தமிழ் அரசியல்வாதிகள் தான் பொறுப்பு என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )