வட, கிழக்கில் விகாரைகள் மீது கை வைக்க முயன்றால் அவர்களின் தலைகளுடனேயே களனிக்கு திரும்புவேன்

வட, கிழக்கில் விகாரைகள் மீது கை வைக்க முயன்றால் அவர்களின் தலைகளுடனேயே களனிக்கு திரும்புவேன்

நாட்டு வளங்களை டயஸ்போராக்களுக்கு விற்க முயன்றால் களனியில் உள்ளவர்களை வீதிக்கு இறக்குவேன் -முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா

இது சிங்கள பௌத்த நாடே, இங்கே தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது என்று தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, தான் வடக்கு, கிழக்கிற்கு செல்வேன் என்றும், அங்கே விகாரைகள் மற்றும் பிக்குகள் மீது கை வைக்க முயன்றால் அங்குள்ளவர்களின் தலைகளுடனேயே களனிக்கு திரும்புவேன் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை புலம்பெயர் தமிழர்களுக்கு இங்குள்ள சொத்துக்களை விற்கவோ, குத்தகைக்கு வழங்கவோ கூடாது என்று ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுப்பதாகவும், அவ்வாறு வழங்க முயன்றால் களனி மக்களோடு வந்து விரட்ட நேரிடும் என்றும் என்றும் மேர்வின் சில்வா எச்சரித்துள்ளார்.

களனி பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேர்வின் சில்வா மேலும் கூறியுள்ளதாவது,

இந்த பகுதி எங்களுக்கு வேண்டுமென்று யாழ்ப்பாணத்தவர் கூறுகையில், கிழக்கில் உள்ளவர்கள் எங்களுக்கு இந்தப் பகுதி வேண்டுமென்று கூறுகையில், தெற்கில் நாங்கள் இந்தப் பகுதி வேண்டுமென்று கூறலாம். ஆனால் நாடு துண்டு துண்டாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இது எங்கள் தாய் நாடு, இதன் உரித்து எங்களிடமே உள்ளது. உங்களுக்கு வேண்டுமென்றால் எங்களுடன் ஐக்கியம் மற்றும் சமாதானத்துடன் வாழ முடியும்.

வடக்கில் உள்ள தமிழ்க் கட்சி தலைவர்களுக்கு நான் ஒன்றை கூறிக்கொள்கின்றேன். நீங்கள் பிரபாகரனின் வாலாக வேண்டாம். பிரபாகரன் என்பவர் கொலைகாரன், இந்த நாட்டு இராணுவத்தினரை கொன்று அவர்களின் பிள்ளைகள், குடும்பத்தினரை வீதிக்கு வர செய்தவர்களின் வால்கள் இன்னும் உள்ளன. டயஸ்போராவில் உள்ளது.

இந்நிலையில் நான் ஜனாதிபதிக்கு கௌரவமாக ஒன்றை கூறுகின்றேன். அதாவது இந்த நாட்டு வளங்களை டயஸ்பேராக்களுக்கு விற்பதற்கும், குத்தகைக்கு கொடுக்கவும் வேண்டாம். அதனை செய்ய முயற்சித்தால் களனியில் உள்ளவர்களை வீதிக்கு இறங்குமாறு கூறுகின்றேன். என்னுடன் வாருங்கள். இவர்களை விரட்டியடிப்போம் என்பதனையும் கூறுகின்றேன். இதனை டயஸ்போராக்களின் வால்களுக்கு வழங்க முடியாது. இதனை இந்த நாட்டில் பிறந்த சிங்கள, முஸ்லிம், தமிழர்கள் ஆகியோருக்கு கொடுங்கள்.

இந்தக் கூட்டத்தின் பின்னர் நான் வடக்கு, கிழக்கிற்கு வருவேன். நீங்கள் விகாரைகளுக்கு கை வைக்க வந்தாலோ, தேரர்கள் மீது கை வைக்க வந்தாலோ நான் களனிக்கு சும்மா வர மாட்டேன். உங்களின் தலைகளையும் கைகளில் எடுத்துக்கொண்டே வருவேன். இதனை நான் மாற்றப் போவதில்லை. இது பௌத்த நாடே. கத்தோலிக்கர், இந்துக்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எவரும் தமது மதத்தை பின்பற்றும் உரிமை உள்ளது. ஆனால் சோழர்கள், எல்லாளனுடன் வந்தவர்களுக்கு இந்த உரிமை தொடர்பில் கதைக்க முடியாது. முஸ்லிம்களுக்கு இதன் உரிமை தொடர்பில் கதைக்க முடியும். அவர்கள் எங்கள் இனத்தவர்களையே திருமணம் முடித்தனர். இப்போது கட்சிகளுக்கு இனவாதத்தை தூண்ட வேண்டிய தேவையாக உள்ளது. ஆனால் மேர்வின் சில்வாவுக்கு இனவாதத்தை தூண்ட வேண்டிய தேவையில்லை என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )