
இலங்கை-இந்திய பாதுகாப்பை மேலும் மேம்படுத்த இணக்கம்; இந்திய புதிய பிரதி உயர் ஸ்தானிகர் – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு
இலங்கைக்கான இந்திய புதிய பிரதி உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
பாதுகாப்பு அமைச்சிக்கு வருகை தந்த புதிய பிரதி உயர்ஸ்தானிகரை பாதுகாப்புச் செயலாளர் வரவேற்றதுடன், பின்னர் இருதரப்பு பாதுகாப்பு விடயங்கள் குறித்து சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கு தனது முழு ஆதரவையும் வழங்குவதாக கலாநிதி பாண்டே இந்த சந்திப்பின் போது உறுதியளித்தார்.
அத்துடன் புதிதாக நியமனம் பெற்றுள்ள இந்திய பிரதி உயர்ஸ்தானிகரின் எதிர்கால நடவடிக்கைகள் சிறப்பாக அமைய பாதுகாப்புச் செயலாளர் தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் அவரது எதிர்கால முயற்சிகளுக்கு தனது முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
இந்த சந்திப்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் விகாஸ் சூட், உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் புனீத் சுஷில் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தம்மிக்க வெலகெதர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

