
“இலங்கையில் கட்டுப்படுத்தப்படும் சீனாவின் ஆதிக்கம்“; ரணிலின் இந்திய விஜயத்தின் பின் மோடி மகிழ்ச்சி
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவருதாக கடந்த காலத்தில் இந்தியா அதிக கவலையுடன் இருந்ததாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின் பின்னர் இந்தியாவுடன் இலங்கை நெருங்கிய உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் பின்னர் இலங்கையில் அதிகமான முதலீடுகளை செய்வதற்கான ஆலோசனைகளை இந்திய அரசாங்கம் முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளது.
அண்மையில் அதானி குழுமத்தின் முக்கிய அதிகாரிகள் இலங்கைக்கு வருகைதந்தது அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ உட்பட முக்கிய அமைச்சர்களை சந்தித்து சென்றனர்.
பலாலி மற்றும் மட்டக்களப்புக்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கும் திட்டங்களை விரைவுப்படுத்துவது குறித்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுக்கும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள 12 பேர் அடங்கிய இந்திய தூது குழுவுக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பொன்றும் இடம்பெற்றது.
அதேபோன்று யாழ்.குடாநாட்டில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த கலப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை இந்தியாவிற்கு வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக The Economic Times நேற்றுமுன்தினம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது பிரதமர் மோடியுடன் இந்தத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடியதன் பின்புலத்திலேயே சீனாவுக்கு வழங்கப்பட்டவிருந்த இத்திட்டம் இந்தியா வசமானதாகவும் The Economic Times கூறியிருந்தது.
திருக்கோணமலை உட்பட கிழக்கு மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை இந்தியா முன்னெடுத்துவருகிறது. வடக்கு மாகாணத்திலும் பலாலி விமான நிலைய அபிவிருத்தி, காங்கேசன்துறைக்கான கப்பல் போக்குவரத்து உட்பட பல்வேறு வேலைத்திட்டங்களையும் இந்தியா முன்னெடுத்து வருகிறது.
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் பின்னரே இத்திட்டங்கள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதுடன், வடக்கில் சீனாவின் ஆதிக்கத்தை குறைப்பதற்கான நகர்வுகளிலும் இந்திய ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், புதுடெல்லியின் இடம்பெற்ற நிழக்வொன்றில் கருத்து வெளியிட்டுள்ள இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட,
“இலங்கையில் சீனாவின் செயற்பாடுகள் குறித்து இந்தியாவில் கவலைகள் எழுந்துள்ள நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அண்மைய விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கையை கட்டியெழுப்பும் செயல்முறையை பலப்படுத்தியுள்ளதாகவும், இந்தியப் பெருங்கடலில் மூலோபாய ரீதியாக இலங்கை அமைந்துள்ளது. இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
அத்துடன், “ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி, இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும் போது, பரஸ்பர பாதுகாப்பு மற்றும் உணர்திறன்களை மனதில் கொள்ள வேண்டியதன் அவசியத்தை கோடிட்டுக் காட்டினார்.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது புவிசார் அரசியல் மற்றும் மூலோபாய பிரச்சினைகள் குறித்து ஆழமான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
இந்தியாவின் பாதுகாப்பே எமது பாதுகாப்பு. எமது இரு நாடுகளுக்கும் இடையில் நாகரீக ரீதியான இணைப்புகள் உள்ளன. எமக்கு ஒரே ரத்தம்தான்“ அவர் என்றும் மிலிந்த மொரகொட கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீன புலனாய்வுக் கப்பல் ஒன்று நிறுத்தப்பட்டதற்கு இந்தியா தமது கடுமையான அதிருப்தியை வெளியிட்டிருந்தது.
அதன் பின்னர் ஜனாதிபதி இந்தியாவுக்கு மேற்கொண்ட முதல் உத்தியோகப்பூர்வ விஜயம் கடந்த மாதம் இடம்பெற்றது.
ஜனாதிபதியின் விஜயம் இலங்கைக்கு பொருளாதார ரீதியாக பல நன்மைகளை பெற்றுக்கொடுத்துள்ளதுடன், இலங்கையில் இந்திய அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்கான பரிந்துரைகளை லோக்சபாவும் வழங்கியுள்ளது.
இதேவேளை, 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தி இலங்கையில் தமிழ் மக்களை மரியாதையாக வாழச் செய்ய வேண்டும் எனவும் பிரதமர் மோடி ஜனாதிபதியிடம் கோிக்கை விடுத்திருந்தார்.
அதன் பிரகாரம் ஜனாதிபதி நாடு திரும்பியது முதல் 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்த தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த மாதம் 26ஆம் திகதி சர்வக்கட்சி மாநாடொன்றை அவர் நடத்தியதுடன், எதிர்வரும் 15ஆம் திகதி மீண்டும் சர்வக்கட்சி மாநாட்டுக்கு அழைப்பும் விடுத்துள்ளார்.
அத்துடன், இன்றைய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் தமது நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தியிருந்தார்.
இவை அனைத்தும் இந்தியாவின் அழுத்தத்தால்தான் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

