
13 க்கு அப்பால் அதிகாரமும் மாகாண சபைத் தேர்தலும் வேண்டும்
13 ஆம் திருத்தத்துக்கு அப்பால் சென்று அதிகாரப் பகிர்வு வழங்கும் அதேநேரம் மாகாண சபைத் தேர்தலும் நடத்தப்பட வேண்டும். ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் ஒன்றைக் கைவிட்டு மற்றதை செய்ய முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடென பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உறுதிபட ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை சர்வகட்சி கூட்டம் இடம்பெற்றது.சுமார் இரு மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் 13 வது திருத்தத்தை அமுல்படுத்துவது குறித்து பேசப்பட்டது. இந்நிலையில் பங்குபற்றிய கட்சி தலைவர்கள் இது தொடர்பில் தமது நிலைப்பாடுகளை முன்வைத்தனர்.
இதன் போது 13 ஆம் திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில்
விமல் வீரவங்ச, சரத் வீரசேகர, உதய கம்மன்பில,அத்துரலிய ரத்தன தேரர் உள்ளிட்ட சிலர் எதிரான கருத்துக்களை முன்வைத்தனர். இந்நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 13ம் திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என தெரிவித்தார்.
அத்துடன் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு எனவும், அது மறுக்கப்பட்டால் வெளியக சுயநிர்ணய உரிமையை கேட்க நேரிடும் எனவும் தெரிவித்தார். இவ்வாறான நிலையில் ஜனாதிபதி, மாகாணங்களுக்கான அதிகாரம் தொடர்பில் கேட்கிறீர்கள், அதேநேரம் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் கூறுகிறீர்கள்.அதிகாரம் வேண்டுமா? தேர்தல் வேண்டுமா? ஏன்பதை தெளிவாக சொல்லுமாறு கூறினார்.
இதற்குப் பதிலளித்த சுமந்திரன் எம்.பி.,நீங்கள் கூறுவது தவறு 13 க்கான அதிகாரத்தை அமுல்படுத்தப்படும் அதேநேரம் தேர்தலும் நடத்தப்படவேண்டும். இவை இரண்டும் ஒரே திசையில் உள்ள விடயம் ஆகவே மாகாணசபை தேர்தல் தேவையா? மாகாணங்களுக்கு அதிகாரங்கள் தேவையா? என தெரிவு செய்யுமாறு கூறுவது பிழையான விடயம் எனக் கூறினார்.
இதனையடுத்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், மாகாணசபை தேர்தலை நடத்துமாறு கோரினார். இதனை மறுத்த சுமந்திரன் எம்.பி., தமிழ் மக்களுக்கான தீர்வு 13 ஆம் திருத்தத்திற்கு அப்பால் செல்லவேண்டும் எனவும்,
மாகாணசபை தேர்தல் நடத்தப்படவேண்டும் எனவும், அதுவே தமிழ்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு எனவும் தெரிவித்தார்.
அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களும் இதே கருத்தை வலியுறுத்தினர்.

