அரசியல் தீர்வில் நீங்கள் போடும் பிச்சையை ஏற்க தமிழர்கள் தயாரில்லை

அரசியல் தீர்வில் நீங்கள் போடும் பிச்சையை ஏற்க தமிழர்கள் தயாரில்லை

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை அங்கீகரிக்காவிட்டால் இந்த நாட்டுக்கு எதிர்காலம் என்பதே இல்லாமல் போய்விடும் என்றும் அரசியல் தீர்வில் நீங்கள் போடும் பிச்சையை ஏற்றுக்கொள்ளுமளவுக்கு தமிழ் மக்கள் இல்லை எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற உத்தேச மத்திய வங்கி சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி பாரத பிரதமரை சந்திக்க செல்ல முன்னர் ஜனாதிபதி எங்களை சந்தித்திருந்தார். இந்த நாடு வங்குரோத்தடைவதற்கு அடிப்படை காரணமாக இருந்தது இனப்பிரச்சினைதான், எனக்கு முன்னர் பேசிய சிலர் இனவாதத்தை கக்குவதுடன், வரலாறுகள் தொடர்பில் பொய்களையே கூறுகின்றனர். 75 வருடங்களுக்கு முன்னர் தமிழர்களுக்கான உரிமையை வழங்கியிருந்தால் நாடு இந்தளவுக்கு வங்குரோத்து நிலைக்கு சென்றிருக்காது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் எங்களுடனான சந்திப்பின் போது நான் ரணில் ராஜபக்ஷ அல்ல, தான் கொடுப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள் விரும்பாவிட்டால் கூறுங்கள் என்றெல்லாம் ஜனாதிபதி கூறினார். இந்நிலையில் ஜனாதிபதிக்கு நாங்கள் கூறும் விடயம் என்னவெனில் இந்த நாடு ஜனாதிபதிக்கு சொந்தமானது அல்ல. இது ஒரு இன மக்களுக்கு சொந்தமானதும் அல்ல. தமிழ் மக்களின் அரசியல் உரிமையானது எங்களுக்கு உரித்தானது. இதனை இவ்வாறுதான் வழங்குவேன் என்று கூறினால் நீங்களும் இப்படிதான் தருவேன் என்று கூறினால் நீங்களும் மிக விரைவில் நிராகரிக்கப்படுவீர்கள். நீங்களும் வீடு செல்ல காலம் வரும். அதற்கு பின்னர் இன்னுமொரு ஜனாதிபதி வருவார். இது நாட்டில் தொடர்ச்சியாக நடக்கும் விடயமாகிவிடும்.

அரசியல் தீர்வில் நீங்கள் போடும் பிச்சையை ஏற்றுக்கொள்ளுமளவுக்கு தமிழ் மக்கள் இல்லையென்ற செய்தியை இவ்விடத்தில் கூற வேண்டும். நீங்கள் இந்த நாட்டில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை அங்கீகரிக்காவிட்டால் இந்த நாடு ஒருபோதும் சிறந்த இடத்திற்கு வராது. எவ்வாறான சட்டங்களை கொண்டுவந்தாலும், தமிழ் மக்களின் உரிமைகளை வழங்காவிட்டால் இந்த நாட்டுக்கு எதிர்காலம் இல்லை என்பதனையே எப்போதும் கூறுகின்றோம்.

அரசியல் தீர்வை வழங்கப் போவதாக அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரையில் கூறி இவர்களை ஏமாற்றிவிடலாம் என்று ஜனாதிபதி நினைக்கலாம். ஆனால் அவரும் அழிந்து போகுமளவுக்கே அவரின் செயற்பாடுகள் அமையும். இந்த நாட்டில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுகளை தீர்க்காவிட்டால் நாட்டை முன்னேற்ற முடியாது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )