
கொழும்பு காலிமுகத்திடலில் ஏற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஈகைச்சுடர்; சிங்களர்கள் இணைந்து அஞ்சலி
2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் இறந்த தமிழர்களுக்கு கொழும்பு காலிமுகத் திடல் போராட்டப் பகுதியில் தமிழர்கள் – சிங்களர்கள் இணைந்து நினைவேந்தல் நிகழ்வு நடத்தி வருகிறார்கள்.
கடந்த காலங்களில் இத்தகைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் பொதுவாக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கை வடகிழக்கில் மட்டுமே நடத்தப்படும் என்பது மட்டுமல்ல. இதற்கு அரசாங்கத்தின் தீவிர எதிர்ப்பும் இருக்கும். இந்த ஆண்டு அத்தகைய எதிர்ப்புகள் ஏதுமில்லை என்பதுமட்டுமல்ல. வரலாற்றில் முதல் முறையாக தமிழர்கள் – சிங்களர்கள் இணைந்து இந்த நினைவேந்தலை நடத்துகிறார்கள்.
அது நடக்கும் இடமும் மிக முக்கியமானது. தலைநகர் கொழும்பில் ஜனாதிபதி செயலகம் அமைந்துள்ள இந்த காலிமுகத் திடல் பகுதியில் கடந்த காலங்களில் ராணுவ வெற்றிக் கொண்டாட்டங்கள் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷவின் ஜனாதிபதி செயலகம் அருகிலேயே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடக்கிறது.
தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளில் நடக்கும் இந்த நிகழ்வில் முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி ஒன்று அமைக்கப்பட்டு, இனம் கடந்து மக்கள் அந்த நினைவு ஸ்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார்கள். ஸ்தூபி அருகே நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.