
அரசின் இன்னொரு மோசடிக்கு பாராளுமன்றம் ஊடாக அனுமதி
உள் நாட்டு கடன் மறுசீரமைப்பு தீர்மானம் நிறைவேற்றபட்டதன் மூலம் அரசாங்கத்தின் இன்னொரு மோசடிக்கு பாராளுமன்றம் ஊடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் சுயாதீன எதிரணி எம்.பி.யுமான உதய கம்மன்பில தேசிய வளங்களை பாதுகாக்கும் பொதுஜன பெரமுனவின் கொள்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இல்லாதொழிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
பிவிதுரு ஹெல உறுமயவின் கட்சி அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் பாராளுமன்ற பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக ஜனாதிபதியின் கட்டளைகளுக்கு அமைய செயற்படுகிறார்கள்.உள் நாட்டு கடன் மறுசீரமைப்பு தீர்மானத்துக்கு தாம் ஏன் வாக்களித்தோம் என்பதைஇவர்களில் பலர் அறியாமல் உள்ளனர்.
உள் நாட்டு கடன் மறுசீரமைப்புக்கான தீர்மானங்கள் எடுக்கும் சகல அதிகாரங்களும் ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.உள் நாட்டு கடன் எந்த வகையில் மறுசீரமைக்கப்படும் என்பது தொடர்பான திட்டம் அமைச்சரவை கொள்கை பத்திரத்தில் தெளிவாக உள்ளடக்கப்பட வேண்டும் என சட்டமா அதிபர் கடந்த மாதம் 27 ஆம் திகதி திறைசேரியின் செயலாளரிடம் உத்தியோகபூர்வமாக வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் உள் நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சட்டமா அதிபர் வழங்கிய ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித சட்ட உத்தரவாதமும் வழங்கப்படவில்லை.எதிர்வரும் காலங்களில் ஆட்சிக்கு வரும் அரசுகள் இந்த பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டியேற்படும்.
உள் நாட்டு கடன் மறுசீரமைப்பு தீர்மானம் நிறைவேற்றபட்டதன் மூலம் அரசாங்கத்தின் இன்னொரு மோசடிக்கு பாராளுமன்றம் ஊடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

