ஜனாதிபதியுடன் பிளவு கிடையாது பாராளுமன்றமும் கலையாது

ஜனாதிபதியுடன் பிளவு கிடையாது பாராளுமன்றமும் கலையாது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் எந்தப் பிளவும்.கிடையாது.எனவே பதவி காலம் முடிவடைவதற்கு முன்னர் பாராளுமன்றம் கலைக்கப்படமாட்டாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த
அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டுள்ளது.வெகுவிரைவில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என ஒருசில சமூக வலைத்தளங்களிலும்,தேசிய ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவை அடிப்படையற்ற செய்திகள்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் அப்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ தலைமையிலான அமைச்சரவை தோல்வியடைந்ததை அரசாங்கத்துக்குள் இருந்த சிலர் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பாரிய அரசியல் நெருக்கடியை உருவாக்கினார்கள். இதனை ஒரு தரப்பினர் பயங்கரவாத செயற்பாடுகளுக்காக மாற்றியமைத்தார்கள்.

கடந்த ஆண்டு நாட்டில் சட்டம்,ஒழுங்கு முறையாக அமுல்படுத்தப்படவில்லை. யார் வேண்டுமானாலும் அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீ வைக்கலாம் என்ற மோசமான நிலைமையே நாட்டில் இருந்தது. இவ்வாறான பின்னணியில் நாட்டில் ஜனநாயகம்,தனிமனித சுதந்திரம் மற்றும் அரசியல் சுதந்திரம் ஆகியவற்றை பாதுகாப்பதற்காகவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவும் அரசியலமைப்பின் பிரகாரம் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.

அவ்வாறு ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க குறுகிய காலத்துக்குள் நாட்டில் ஜனநாயகம்,தனி மனித சுதந்திரம் மற்றும் அரசியல் சுதந்திரத்தை உறுதிப்படுத்தினார்.பொருளாதாரப் பாதிப்புக்கு தீர்வு காண ஜனாதிபதி வகுத்த திட்டங்கள் வெற்றி பெற்றுள்ளன.நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் பிளவு எனக் கூறப்படுவது அடிப்படையற்றது. அரசியல் ரீதியில் முரண்பாடுகளை நாங்கள் தோற்றுவிக்க போவதில்லை.ஜனாதிபதியுடனும்,ஐக்கிய தேசியக் கட்சியுடனும் இணக்கமாகவே செயற்படுவோம் .எனவே பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னர் பாராளுமன்றம் கலைக்கப்படமாட்டாது என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )