அரசுடன் பேசுவதானால் ஒரே குரலில் பேசுவோம்; மாவை,விக்கி கட்சிகளுக்கு சுரேஷ் அழைப்பு

அரசுடன் பேசுவதானால் ஒரே குரலில் பேசுவோம்; மாவை,விக்கி கட்சிகளுக்கு சுரேஷ் அழைப்பு

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுகள் தொடர்பில் எதிர் காலத்தில் நாங்கள் அரசாங்கத்துடன் பேசுவதாக இருந்தால் மாவை சேனாதிராஜா தலைமையிலான இலங்கை தமிழரசுக்கட்சி , ,சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மற்றும் எமது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் இணைந்து ஒரே குரலில் பேச வேண்டும். அதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும் முடிவுகளை நாம் எடுத்துள்ளோம்.என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

33 ஆவது தியாகிகள் தின நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னாரில் உள்ள ஈ.பி.ஆப்.எல்.எப் கட்சி அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் தலைமையில் இடம்பெற்றபோது அதில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

ஈ.பி.ஆர்.எல்.எப்,ரெலோ,புளொட்,தமிழ் தேசிய கட்சி,ஜனநாயக கட்சி ஆகிய 5 கட்சிகளும் ஒன்று கூடி நாங்கள் அனைவரும் திடமான ஒரு பாதையில் செல்வதற்கு ஒரு யாப்பை தயார் செய்து அனைவரும் அதனை ஏகமனதாக ஏற்றுக் கொண்டுள்ளோம்.
முன்னர் தமிழரசு கட்சி இருந்த போது நாங்கள் ஒரு யாப்பை தயாரிக்க முடியாது என்று சொன்னார்கள்.இன்று குறித்த 5 கட்சிகளுக்கும் ஒரு நிர்வாகத்தையும் தெரிவு செய்துள்ளோம்.

கட்சிக்கான செயலாளர்,பேச்சாளர்,குறித்த கட்சிக்கான தேசிய அமைப்பாளரை நியமித்துள்ளோம்.இவ்வாறு பல்வேறு தெரிவுகளை மேற்கொண்டு ஒரு நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்தி உள்ளோம்.எமது முக்கிய நோக்கம் நாங்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் .

மேலும் ஒரு கோரிக்கையையும் நாங்கள் முன் வைத்துள்ளோம். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுகள் தொடர்பில் எதிர் காலத்தில் நாங்கள் அரசாங்கத்துடன் பேசுவதாக இருந்தால் மாவை சேனாதிராஜா தலைமையிலான இலங்கை தமிழரசுக்கட்சி , ,சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மற்றும் எமது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் இணைந்து ஒரே குரலில் பேச வேண்டும் என்பது தான் அந்தக்கோரிக்கை .அதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும் முடிவுகளை நாம் எடுத்துள்ளோம்.

சுமார் 45 வருட கால போராட்டம்.யுத்தம்.,உலகத்திலே ஈழத்தமிழர்களின் இழப்பு என்பது சொல்லில் அடங்காது.இந்த மண்ணில் பாரிய ஒரு இனப்படுகொலை நடந்து முடிந்துள்ளது.லட்சக்கணக்கான மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன .அந்த நிலையில் எமது மக்களின் உரிமைகள் வெற்றி பெற வேண்டும்.இந்த மண்ணில் யாரும் கேள்வி கேட்க முடியாத நிலையில்,நாங்கள் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )