
வட, கிழக்கில் அரசிடமிருந்தே தொல் பொருளுக்கு ஆபத்து
குருந்தூர் மலை விகாரை உட்பட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல் பொருட்களை பிரிவினைவாதிகளிடமிருந்தோ அல்லது தீவிரவாதிகளிடமிருந்தோ அல்ல, தற்போதைய அரசாங்கத்திடம் இருந்துதான் காப்பாற்ற வேண்டியுள்ளது என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்
பிவித்துரு ஹெல உறுமய கட்சி அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே உதய கம்மன்பில இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையின் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுப் பாரம்பரியங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருக்கின்றன.யுனெஸ்கோ அமைப்பிற்கு அப்போதைய அமைச்சர் சிறில் மத்யூ அனுப்பிய முறையீட்டில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த 276 இடங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இவை 1983 ஆம் ஆண்டளவில் அடையாளம் காணப்பட்டவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.
தற்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளன.வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பழங்காலப் பொருட்கள் பிரிவினைவாதிகளாலும், தீவிரவாதிகளாலும் அழிக்கப்படுவது மட்டுமன்றி, அரச அதிகாரிகள் செயலற்றவர்களாகவும், நீதிமன்றங்களுக்கு பொய்யான அறிக்கைகளை வழங்கி ஆதரவளிப்பதாகவும் இருக்கின்றனர்.
எனவே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புராதனச் சின்னங்கள் அழிக்கப்பட்டமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்ற பிரேரணையை எதிர்வரும் 19ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாகவும் கம்மன்பில தெரிவித்தார்.

